×

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் யாருக்கும் தானாக குடியுரிமை வழங்கப்படாது: உள்துறை விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்த சட்டவிரோதமாக குடியேறிய யாருக்கும், தானாக குடியுரிமை வழங்கப்படாது. முறையாக விண்ணப்பித்து பரிசீலக்கப்பட்ட பின்பே குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தால் நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை வழங்குவது பற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த புதிய சட்டத்தால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இன்த்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தானாக குடியுரிமை கிடைத்துவிடும் என்பது அர்த்தம் அல்ல.

அவர்கள் முதலில் குடியுரிமைக்கு மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேவையான விஷயங்கள் நிறைவேறினால் மட்டுமே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘‘வன்முறையை கட்டுப்படுத்தி, மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் சமூக இணையதளங்களில் போலி செய்திகள், வதந்திகள் பரப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.


Tags : immigrants ,no one , Illegal, immigrants, automatically granted citizenship, interior description
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...