சேலம் அன்னதானப்பட்டி, சுந்தர் லாட்ஜ் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்: கட்டாயம் அணிய வலியுறுத்தல்

சேலம்: சேலத்தில் ஹெல்மெட் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அன்னதானப்பட்டி, சுந்தர்லாட்ஜ் பகுதி களில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களை, போலீசார் திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் டூவீலர் ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சேலம் மாநகரை பொறுத்தவரை, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, சீலநாய்க்கன்பட்டி, ஜவுளிக்கடை, திருவள்ளூவர் சிலை, கலெக்டர் அலுவலகம், சுந்தர் லாட்ஜ், 5 ரோடு, முள்ளுவாடிகேட், அஸ்தம்பட்டி என மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனைகள் மேற்கொண்டு, ஹெல்மெட் அபராதம் விதிப்பதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, சேலம் மாநகரில் 2 முக்கிய சாலைகள் ஹெல்மெட் பகுதிகளாக மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்னதானப்பட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து பிரபாத் சிக்னல் வரை செல்லும் பிரதான சாலையிலும், சுந்தர் லாட்ஜில் இருந்து மரவனேரி மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையிலும் ஹெல்மெட் அணியாமல் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று காலை 7 மணி முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சுந்தர் லாட்ஜில் உள்ள அம்பேத்கர் சிலை, பிரபாத் சிக்னல் மற்றும் அன்னதானப்பட்டி ஜங்சன் ஆகிய இடங்களில் போலீசார் நின்று, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனர். அப்போது, வாகன ஓட்டிகள் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து வர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த போலீசார், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories:

>