×

‘பணத்துக்கு பதில் பாம் வாங்கிக்கோ’ மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு: 3 வாலிபர்கள் அதிரடி கைது

திருபுவனை: புதுச்சேரி மாநிலம், திருபுவனை அருகே திருவண்டார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் 3 பேர் ஒரு மோட்டார் பைக்கில் வந்து, மது விற்பனை செய்த பாஸ்கரிடம் தங்களுக்கு 3 மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். மதுபாட்டில்களை எடுத்து கொடுத்து, அவர்களிடம் பாஸ்கர் பணம் கேட்டபோது, அக்கும்பலை சேர்ந்த ஒருவன் திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை எடுத்து “பணம் இல்லை... பணத்திற்கு பதில் பாம் தருகிறேன்....” என கூறி மதுக்கடை சுவரில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து மதுக்கடை ஊழியர் பாஸ்கர் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதில் வெடிகுண்டு வீசிய ஆசாமிகள் பிடாரிக்குப்பம் அர்ச்சுனன் மகன் விக்னேஷ் (22), இளங்கோவன் மகன் கதிர்  (19), சன்னியாசிகுப்பம் ரத்தினவேல் மகன் முகேஷ் (19)  என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் அதிரடியாக கைது  செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருபுவனை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கரும்பு தோட்டத்தில் பிரபல ரவுடி ஜனா, அவரது கூட்டாளிகள் வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்தபோது, போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கினர். அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிலர் தப்பியோடிவிட்டனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதுபானக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது திருபுவனை சுற்றுவட்டார பகுதியில் வெடிகுண்டு வீசுவது மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு வெடிகுண்டு கலாசாரத்தை ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Tags : Bomb blast ,bartender ,youths , Of money, palm, bartender, bombing
× RELATED மதுரையில் வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது