×

ஏலம் எடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ஆயுள் தடை விதிக்கலாம்: சிவ.இளங்கோ, சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர்

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். அதன்பிறகு எங்களது கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தனர். அந்த புகாருக்கு அக்னாலெஜ்மன்ட் கூட தரவில்லை. கடந்த காலங்களில் கிராம வளர்ச்சி என்கிற பெயரில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் ஏலம் விடப்பட்டு வந்தது. அதுவும், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்ற நிலையில் தான் ஏலம் போனது. ஆனால், இப்போது ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஒரத்தநாடு, கடலூர் போன்ற பகுதிகளில் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பதவிகளை வியாபாரமாக பார்க்கின்றனர். முதலீடு போட்டு, அதை விட அதிகமாக எடுத்து விடலாம் என்று கணக்கு போடுகின்றனர்.

 நேரடியாக மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் திட்ட நிதியை அவர்கள் தான் கையாள முடியும். ஒரு உள்ளாட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.1 கோடி என்றால் 5 வருடத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை கொண்டு சாலை, குடிநீர், மின் விளக்கு, சுகாதார வசதிக்கு ஒதுக்கப்படுகிறது. இப்போது ரூ. 50 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்தவர்கள் தான் இந்த நிதியை கையாள்வர். அவர் என்ன செலவு செய்தார்? எதற்காக அந்த நிதியை பயன்படுத்தினார் என்று மக்களுக்கு  கேள்வி கேட்க உரிமை இருக்காது. ஏலம் எடுத்தவர்,  ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்று அறிவிக்கப்படுவதால், வாக்காளர்களுக்கு, கேள்வி கேட்கும் நிலை இல்லாமல் போய் விடும்.இந்த மாதிரி உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஏல கூட்டத்தில் பங்கேற்ற  ஊர் முக்கியஸ்தர்களுக்கு, ஏலம் எடுத்த வேட்பாளர்கள் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும். அடுத்ததாக இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். இந்த மாதிரி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஏலம் விடுவதை தடுக்க முடியும். இல்லையெனில் ஏலம் விடுவது சர்வசாதாரணமாகி விடும்.

 மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால், அவர்கள் அதை பயன்படுத்துவதில்லை. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆளும் கட்சிக்கு ஏதுவான தேதியில் தான் தேர்தல் வைத்துள்ளனர். அதே போன்று, மொத்தமாக தேர்தல் நடத்தாமல் முதன்முறையாக ஊரக பகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து வரும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே, தான் ஊரக தேர்தல் முடிவுகளை அனைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடித்த பிற வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

அவர்கள் எங்களது கோரிக்கையை ஏற்கா விட்டால் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையரை நியமிப்பது போன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.  இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அவ்வளவு எளிதாக மத்திய அரசு மாற்றி விட முடியாது. அது போன்று மாநில தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளையும் நியமனம் செய்யும் பொறுப்பை மாநில தேர்தல் ஆணையர் முடிவு செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையரை நியமிப்பது ேபான்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.  ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளையும் நியமனம் செய்யும் பொறுப்பை மாநில தேர்தல் ஆணையர் முடிவு செய்ய வேண்டும்.

Tags : Auctioneer ,prison ,Shiva Ceylon Bidder , Bidder,sentenced , 10 years, prison,life imprisonment
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...