×

மெரினா காமராஜர் சாலையில் நள்ளிரவு பரபரப்பு கார் மோதி கழுத்து எலும்பு துண்டாகி குதிரை பலி: பெங்களூரு வாலிபர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால் கடற்கரை மணலில் குதிரை சவாரி செய்யும் வகையில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குதிரைகள் அனைத்தும் திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம், நடுக்குப்பம் பகுதியில் சிலர் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலை ேமாதியது. நள்ளிரவு மெரினா கடற்கரையில் சவாரி முடிந்து வெள்ளை நிற குதிரை ஒன்று காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தது. மாநில கல்லூரி அருகே வரும்போது, பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி காமராஜர் சாலையில் மின்னல் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த குதிரை மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குதிரை  கழுத்து எலும்பு துண்டாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது. மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குதிரை உடலை மீட்டனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காமராஜர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.அப்போது, பெங்களூரு மகா கணபதி நகரை சேர்ந்த மோனிஸ்குமார்(26) என்பவருக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. அதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி குதிரை மீது காரை ஏற்றிய மோனிஸ்குமார் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Bengaluru , Bengaluru,youth,arrested,colliding ,horse
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்