×

தஞ்சையில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சை: தஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தஞ்சை வடக்கு வீதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினரால் இயங்கி வரும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி நர்சரி-பிரைமரி பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தை சீர்செய்தபோது புதையுண்டு கிடந்த ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பண்டிதரும் தொல்லியல் ஆய்வாளருமான மணிமாறன், தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று அக்கல்வெட்டினை ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்த கல்வெட்டு தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது. 3½ அடி உயரமும் 1¼ அடி அகலமும் கொண்டது. இதில் 15 வரிகள் உள்ளன. தஞ்சையில் கி.பி. 1535 முதல் கி.பி. 1675 வரை 140 ஆண்டுகள் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. இவர்களுடைய ஆட்சியில் பல புதிய கோயில்கள் கட்டுதல், பழுதடைந்த கோயில்களை சீரமைத்தல் மற்றும் அவைகளுக்கு அறக்கொடை வழங்குதல் போன்றவை நடைபெற்றது. அந்த வகையில் இன்றைய சீனிவாசபுரம் பகுதிக்கு மேற்கே மேலவெளி ஊராட்சியில் சிங்கப்பெருமாள் குளம் எனும் இடத்தில் அமைந்திருந்த  சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வழங்கிய கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இதில் சங்கு, சக்கர சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. வெட்டப்பெற்ற ஆண்டு, மாதம், தானம் அளித்தவர் பெயர் எதுவும் இல்லை. இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தி, சிங்கப்பெருமாள் கோயிலுக்காக பூர்வதர்மமாக வழங்கப்பட்ட நந்தவனம், பூந்தோட்டம் ஆகிய சொத்துக்களுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால் அவர்கள் கங்கைக்கரையில் காராம் பசுவினைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்கின்றது. சீனிவாசபுரம் பகுதியில் கோயில் இருந்தபொழுது அங்கு இருந்த இக்கல்வெட்டு, பின்னர் கோயில் இடப்பெயர்வு ஏற்பட்டபோது வடக்கு வீதி வழியே செல்கையில் இங்கேயே இருத்தி வைக்கப்பட்டு புதையுண்டு  போயிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்….

The post தஞ்சையில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanjore ,Tanjore North Road ,Foundation of ,Kanchi Kamakodi Peedam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...