×

டெல்லியில் காற்றுமாசை தடுக்க வைக்கோல் மூலம் மின்சாரம் தயாரிப்பு: ஐஐடியுடன் தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: வீணாக எரிக்கப்படும் வைக்கோல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க தனியார் நிறுவனம் சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பஞ்சாப், அரியானா மாநில வயல்வெளிகளில் எரிக்கப்படும் பயிர்களின் வேர் பகுதியால் டெல்லியில் காற்று மாசு 3 மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரித்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண சென்னை ஐஐடி முன்வந்துள்ளது. சென்னை ஐஐடி பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள், புதிய கருவிகள் கண்டுபிடிப்பில் உதவி வருகிறது. அந்த வகையில், வீணாக எரிக்கப்படும் பயிர்களின் அடிப்பகுதியை சேகரித்து அனல் மின்உற்பத்தி செய்யும் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கூறப்படுவதாவது: ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வீணாக தரையில் விடப்படும் பயிர்களின் அடிப்பகுதியின் எடை மட்டும் 3.5 கோடி டன். இவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க முடியாது. ஒரு கிலோவுக்கு 3200 முதல் 3500 கிலோ கேலரி எரிசக்தி கிடைக்கிறது. இது ஒரு கிலோ நிலக்கரியை எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது. சுக்பிர் அக்ரோ எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாப், அரியானாவில் தாவர எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் 2 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. சென்னை ஐஐடியில் இந்திய சூழலுக்கு ஏற்ப குறைந்த செலவில், அதிக எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான மாதிரி மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை சுக்பிர் அக்ரோ எனர்ஜி லிமிடெட் வழங்கும்.

மாதிரி மின் உற்பத்தி நிலையத்தில் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதை அடிப்படையாக வைத்து, சுக்பிர் அக்ரோ நிறுவனம் மெகா பாய்லர் ஒன்றை மின் உற்பத்தி நிலையத்தில் நிறுவ உள்ளது. அதன்மூலம் 4000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுவதோடு, பயிர்களின் தேவையற்ற அடிப்பகுதி எரிக்கப்படுவதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் வெளிவருவதும் தவிர்க்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : MOU ,IIT Delhi ,Delhi , Delhi, windmill, hay, IIT, private company
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...