×

திண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து

திண்டுக்கல் : திண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சபரிமலையில் வரும் டிச.27ல்  ஐயப்பன் மண்டல பூஜையும், ஜன.15ல் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும், அவற்றினை சார்ந்த பகுதிகளிலிருந்தும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி வரும் டிச.15ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை இப்போக்குவரத்து கழகத்தின் மூலம் மேற்கண்ட ஊர்களில் இருந்து குமுளிக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், குமுளியிலிருந்து சபரிமலைக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் அதிக அளவில் கேரள மாநில போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல் டிச.27ம் தேதி மண்டல பூஜையின் போது சுமார் 100 பேருந்துகளும், ஜன.15ம் தேதி மகர விளக்கு பூஜையின் போது தேவைக்கேற்ப மேலும் அதிக அளவு பேருந்துகளும் மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து இக்கழகத்தின் மூலம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக குமுளி, திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரை ஆகிய பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குமுளியில் மேற்குறிப்பிட்ட திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்ல முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் நிர்வாக இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul ,Palani ,Special ,Sabarimala Mandala Pooja For Sabarimalai Mandala , Sabarimalai , mandala poojai, Special buses,Dindigul ,Palani , Devotees
× RELATED ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை: நடவடிக்கை கோரி தாயார் மனு