×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

மன்னார்குடி :மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகொடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கோயிலில் நுழைவு வாயிலில் உள்ள பிரம்மாண்ட மான ராஜகோபுரம் உள்பட பிராகாரத்தில் 7 தூண்கள், 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் 9 புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த கோயில் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125ல் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு என காலம் காலமாக பெருமையாக பேசப்பட்டு வரும் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது சங்கீதா என்பவர் செயல் அலுவலராக உள்ளார். இந்திய அளவில் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்யதினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைந்த அளவே செய்து தரப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ராஜகோபால சுவாமி கோயிலின் நுழைவு வாயிலில் இருக்கும் பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளிட்ட கோயிலை சுற்றியுள்ள கோபுரங் களில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் செடி கொடிகள் மண்டி கிடக்கிறது. கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களின் இடுக்குகளில் சிறிய அளவிலான மரங்கள் வளர தொடங்கியுள்ளன. இதனால் கோபுரங் களின் ஸ்திர தன்மை சிதில மடைய துவங்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால் கோபுரங்களின் கட்டுமானம் பாதிப்படைந்து பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டு அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது வேத னையை அளிப்பதாக பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள் இக்கோயிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கோபுரங்களில் சேத மடைந்த பகுதிகளை சீரமைத்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தியும் தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயிலின் செயல் அலுவலர் சங்கீதா கூறுகையில், கோபு ரங்களில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைகாலம் என்பதால் கோபுரங்களின் மேல் ஏரி செடிகொடிகளை மருந்து வைத்து அகற்றுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் வெளியூரில் இருந்து இதற்காக பணியாட்களை வரவழைக்கப் பட்டு மிக விரைவில் செடி கொடிகள் அகற்றபடும். மேலும் பக்தர்களின் கோரிக்கைகள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தரப்படும் என கூறினார்.

Tags : plants ,towers ,Managarkudi Rajagopala Swamy Temple ,Mannargudi Rajagopalswami Temple Gopurankal , Mannargudi ,Rajagopalswami Temple,Officials
× RELATED பீட்ரூட் கீரை மசியல்