×

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள் விரட்டியடிப்பு: மேலும் 40 யானைகளை விரட்டும் பணி தீவிரம்

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன. மேலும், 40 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக 30 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 70க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இதனால் சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு அங்குள்ள கிராம பகுதிக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வனப்பகுதிக்குள் வர வேண்டாம். விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டாம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், யானைகள் சேதப்படுத்தியது போக, மீதமுள்ள நெல், ராகி பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய துவங்கினர். இச்சமயம் யானைகள் மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்தால் தங்களுக்கு மிகவும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என கவலையடைந்த விவசாயிகள், இந்த யானைகளை உடனடியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் வனத்துறையினர் நேற்று யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்தனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட வனஊழியர்கள், சானமாவு வனப்பகுதிக்கு வந்து யானைகள் இருக்கும் இடத்திற்கு சென்று தாரை, தப்பட்டை அடித்தனர். பின்னர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தனர்.

இந்த முயற்சியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் தங்களது குட்டிகளுடன் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையை கடந்து, பென்னிக்கல் வழியாக ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. மேலும், 40க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் சினிகிரிப்பள்ளி வரை சென்று மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கே வந்துவிட்டன. இதனால் விவசாயிகள் இந்த யானை களையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : 60 Elephants Camping ,forest ,Hosur Sanamavu , Hosur Sanaamau Wilderness, Elephants, Chase
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ