×

பிஎஸ்எல்வி ராக்கெட்டை 50வது முறையாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்: முதல்வர் வாழ்த்து

சென்னை: பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் நேற்று மாலை 3.25 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு புவி சூற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கை கோளான ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியிலான வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல்வேறு ஆய்வுகளுக்காக பி.எஸ்.எல்.வி ராக்கெட் 50வது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர். இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இவர்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : scientists ,Congratulations CM ,ISRO ,CM Palanisamy , BSLV rocket, ISRO scientists, CM Palanisamy
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...