தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 32 லட்சம் ரூபாய் ஏலம் விடப்பட்டு 15ம் தேதிக்குள் பணம் கட்ட தவறினால் மற்றொரு நபர் முழு தொகையையும் கட்டி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையே கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் ஏலத்தில் விடப்படுவதாகவும், கூடுதல் விலையை கொடுப்பவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பான தகவல் பரவியது. இதனை தொடர்ந்து உள்ளாட்சி பதவிகளை ஏலத்தில் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் பதவி 32 லட்சம் ரூபாய் ஏலம் விடப்பட்டுள்ளது. அதற்கான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. நேற்று இரவு சரியாக 5.30 மணியளவில் ஊராட்சிமன்றத்திற்கான கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு எவ்வளவு செலவு ஆகினும் பரவாயில்லை ஊராட்சிமன்ற தேர்தலில் தன்னை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனை தொடர்ந்து, ஊர் மக்கள் சார்பாக யார் அதிக பணம் கொடுக்கிறீர்களோ அவர்களே ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.
அனைவருமே அதிக தொகை செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கும் சூழ்நிலையில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் உடனடியாக மொத்த தொகையும் செலுத்த தயார் என கூறியுள்ளனர். இதனை அடுத்து, அனைவருடைய பெயர்களையும் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 15ம் தேதிக்குள் முன்பணம் செலுத்தவேண்டும். மீதமுள்ள தொகையை தேர்தல் நடத்துவதற்கு முன்தினம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்ட தவறினால் மற்றொரு நபர் முழு தொகையையும் கட்டி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.