×

கடையம் பகுதி மலையடிவாரத்தில் யானைகள் தொடர் அட்டகாசம்: காட்டிற்குள் விரட்ட முடியாமல் வனத்துறை திணறல்

கடையம்: கடையம் அருகே கருத்தபிள்ளையூர் கிராம தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் 28 தென்னை மரங்களை பிடுங்கி நாசம் செய்தன. ஒரு மாதகாலமாக மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்திற்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கடையம் அருகே கருத்தபிள்ளையூரை சேர்ந்தவர் வின்சென்ட். விவசாயியான இவர்  மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த 10 தென்னை மரங்களை பிடுங்கி குருத்துகளை தின்று நாசம் செய்தன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற வின்சென்ட் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதே பகுதியில் ஜெகநாதன் என்பவரது தோட்டத்தில் புகுந்த யானைகள் 18 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளன. ஏற்கனவே கடந்த நவ 12ம் தேதி வின்சென்ட் தோட்டத்தில் புகுந்த யானைகள் 30 தென்னை மரங்களை பிடுங்கியது குறிப்பிடதக்கது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, பங்களாகுடியிருப்பு, ஆம்பூர், கருத்தபிள்ளையூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குட்டியுடன் கூடிய யானை கூட்டங்கள் சுற்றி வருகின்றன. மலையடிவாரத்திலுள்ள தென்னந்தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு, வாழை, எலுமிச்சை தோப்புகளில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் விரட்டி விட்டாலும் சிறிது தூரம் மட்டும் திரும்பி செல்லும் யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் வனத்துறையினர் செய்வதறியாது திணறி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க அமைக்கபட்ட மின்வேலிகள் ஒரு சில பகுதிகளில் இல்லை. இந்த வழியாக தான் யானைகள் மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் சோலார் மின் வேலிகள் அமைத்து தர வேண்டும். சேதமான பயிர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அட்டகாச குரங்குகள் சிக்கின

வி.கே.புரம் டாணாவைச் சேர்ந்த திருமலை நம்பியன் மகன் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான தோட்டம் டாணா அனவன்குடியிப்பு பகுதியில் உள்ளது. இதில் ஏராளமான தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக கூட்டமாக முகாமிட்ட குரங்குகள், தென்னை மரங்களில் உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து சேதம் விளைவித்து வந்தன. இதுகுறித்து சுப்பிரமணியன் பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் பாரத் உத்தரவுபடி வனவர் மோகன், குரங்குகளை பிடிப்பதற்காக தோப்பில் கூண்டு வைத்தார். இந்த கூண்டில் 14 குரங்குகள் சிக்கின. பிடிபட்ட குரங்குகள் காரையாறு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.

Tags : foothills ,Kadaiyam ,area , Wild elephants
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி