×

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ரூ.300 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளர்கள் வேதனை

கோவில்பட்டி: கொட்டித் தீர்க்கும் வடகிழக்குப் பருவமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், தர்மபுரி மாவட்டங்கள் என சுமார் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 50 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றின் வாயிலாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். குறிப்பாக 80 சதவீதம் பெண்கள் ஆலைகளில் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான தீப்பெட்டி பண்டல்கள் குஜராத், டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. சென்னை, தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியாகவும் வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு தீப்பெட்டி தயாரிப்பிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது.

இந்த வரியை 12 சதவீதமாக குறைக்கக்கோரி தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலமுறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களிலும் வலியுறுத்தியும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இதனால் ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக இரவு பகலாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

பொதுவாக தீப்பெட்டி உற்பத்திக்கு மிதமான தட்பவெப்ப சீதோஷ்ண நிலை தேவையாகும். அதாவது இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும்  தீச்குச்சிகளில் உள்ள மருந்துகள் (கெமிக்கல் கலந்த மருந்து) காய்வதற்கு வெப்பமான சூழ்நிலை தேவையாகும். ஆனால், தொடர் மழையால் தீக்குச்சிகளில் உள்ள மருந்துகளை வெயிலில் அதாவது வெப்ப சீதோஷ்ண நிலையில் காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தீப்பெட்டி குச்சி தயாரிப்பிற்கான மரத்தடிகள், தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளுக்கு கொண்டு வரப்பட்டு, அவைகளை இயந்திரம் மூலம் தீக்குச்சிக்கான மரக்குச்சிகளாக தயாரிப்பட்டாலும், இக்குச்சிகளை வெயிலில் உலர வைக்க முடியாத அளவிற்கு தொடர் கனமழை பெய்து வருவதால், தீப்பெட்டி உற்பத்திக்கான மரக்குச்சிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொடர் மழையால் பொட்டாசியம் குளோரைட், மெழுகு, வஜ்ஜிரம், தீப்பெட்டி குச்சிகளை அடைக்கும் மேல் மற்றும் அடிப்பெட்டிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தொடர் கனமழையால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை. மேலும் தொடர் மழையால் தமிழகத்தில் கடந்த 35 நாட்களாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது. தீபாவளிக்கு முன்னர் இத்தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் அனைத்தும் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. தீபாவளி பண்டிகை முடிந்த நாளில் இருந்து இதுநாள் வரையில் தொடர் மழையால் தொழிற்சாலைகளில் தீப்பெட்டி பண்டல்களின் இருப்பு இல்லை என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் கடந்த 35 நாட்களாக தொடர் கன மழையால் தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் பணிகள் முடங்கி உள்ளதால் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தீப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருட்களான மரக்குச்சிகள், மெழுகு, வஜ்ஜிரம், பொட்டாசியம் குளோரைடு, காகித அட்டைகளின் விலை உயர்வு, லாரி வாடகை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழிலானது. தற்போதைய தொடர் மழையால் ரூ.300 கோடி மதிப்பில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் பணிகள் முடங்கி போய் உள்ளதால், வருவாய் இழப்பால் உற்பத்தியாளர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கி போய் உள்ள உற்பத்தியாளர்கள், வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் வாங்கி கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும், மானிய விலையில் மூலப்பொருட்கள் வழங்கவும், வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என தமிழக தீப்பெட்டி தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தர்மபுரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மழை காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்வதில் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரூ.300 கோடி மதிப்பில் தீப்பெட்டி உற்பத்தி செய்வதில் முடக்கமும், இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதை தொடர் கனமழையால் தீப்பெட்டி உற்பத்தி பணிகள் முடங்கியுள்ளதால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றினால் மட்டுமே நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழிலை நிரந்தரமாக பாதுகாக்க முடியும்’’ என்றார்.

Tags : Northeast ,Sri Lanka ,Manufacturers ,Tamil Nadu , Northeast Monsoon, Tamil Nadu, Rs 300 Crore
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!