×

பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு குழாய் மூலம் தண்ணீர்: நீண்ட கால திட்டம் நிறைவேறுமா?

வி.கே.புரம்: பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை தடுத்து பாசன நிலங்களை பாதுகாக்கும் வகையில் பாபநாசத்தில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு வனப்பகுதியில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான பொதிகை மலையில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகிறது. இதனுடன் மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளாறு, பேயாறு, காரையாறு, பாம்பாறு, சேர்வலாறு ஆகியவை இணைந்து தாமிரபரணியில் பெருக்கெடுத்து பாய்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 130 கி.மீ தூரம் பயணித்து புன்னக்காயல் அருகே கடலில் தாமிரபரணி கலக்கிறது. தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் தாமிரபரணி மூலம் பாசன வசதி பெறுகின்றன. இத்துடன் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி திகழ்கிறது.

தாமிரபரணி பாயும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும், தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடியும் நடக்கிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் தரைநிலை உயரம் சமமாக இருப்பதால் பாபநாசம் அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக தண்ணீரை சேர்வலாறு அணைக்கு கொண்டு வரும் வசதி உள்ளது. இங்கிருந்து பாபநாசம் கீழ் அணைக்கு வரும் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி நடந்த பிறகு பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.

பாபநாசம் அணை வடகிழக்கு பருவமழை காலத்தில் முழு கொள்ளளவான 143 அடியை எட்டுவது வழக்கம். இக்காலக்கட்டத்தில் அணையில் இருந்து பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதே நேரத்தில் மணிமுத்தாறு அணை ஆண்டுதோறும் நிரம்புவதில்லை. இதனால் கடலில் கலக்கும் வீணாகும் தண்ணீரை பாபநாசத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து மணிமுத்தாறு அணைக்கு கொண்டு செல்லலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்கனவே ஆராயப்பட்டன.
பாபநாசம் அணை தரைமட்டத்தில் இருந்து 725 அடி உயரத்தில் உள்ளது.

ஆனால் மணிமுத்தாறு அணையோ தரைதளத்தில் இருந்து பாபநாசம் அணையை விட குறைவான உயரத்தில் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக சேர்வலாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து, அங்கிருந்து மின் உற்பத்திக்காக பாபநாசம் கீழ் அணை வரை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து பாபநாசம் கீழ் அணையில் இருந்து வனப்பகுதி வழியாக மணிமுத்தாறு அணைக்கு சுரங்கம் அமைத்து கொண்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் வீணாகும் பல டிஎம்சி தண்ணீரை சுரங்கப்பாதை அமைத்து கொண்டு வந்தால், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையையும் ஆண்டுதோறும் நிரப்ப முடியும்.

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் உபரிநீரை சுரங்கப்பாதை அமைத்து மணிமுத்தாறு அணைக்கு கொண்டு சென்றால் 308 குளங்கள் மூலம் 22 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்களும், பெருங்கால் மூலம் 2 ஆயிரத்து 586 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே அரசு பாபநாசம் அணையில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து மணிமுத்தாறு அணைக்கு உபரி நீரை கொண்டு செல்ல திட்டம் தீட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த விவசாய சங்க உறுப்பினர் துரை சொரிமுத்து கூறுகையில், ‘‘பாபநாசம் பகுதியில் உள்ள காரையாறு, சேர்வலாறு அணைகளுக்கு இடையே நீர் செல்ல ஏற்கனவே சுரங்கப்பாதை உள்ளது.

அதேபோல் முண்டந்துறை அருகே கொட்டதாளம் பகுதியில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து பாபநாசம் அணை தண்ணீரை மணிமுத்தாறு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளலாம். வனப்பகுதியில் குழாய்கள் அமைத்தும் தண்ணீரை கொண்டு வரலாம். மணிமுத்தாறில் தலைமதகு பாசனத்தில் உள்ள 4 ரீச்சுகளுக்கும், 80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே திறக்க முடியும். சில ஆண்டுகள் மணிமுத்தாறு 80 அடியை தொடுவதில்லை. எனவே தலைமதகு பாசனத்தில் தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதில்லை. எனவே பாபநாசம் அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் மணிமுத்தாறு தண்ணீர் கொண்டு வந்தால், இந்த அணையும் நிரம்பும். இவ்விரு அணைகளுக்கும் இடையே 5 கிமீ தொலைவிற்கு இணைப்புகள் ஏற்படுத்தினால் போதுமானது.

மேலும் பாபநாசம், சேர்வலாறு அணைகள் மின்வாரியத்தில் கட்டுப்பாட்டிலும், மின்சாரம் உற்பத்தியிலும் பிரதானமாக உள்ளது. ஆனால் மணிமுத்தாறு அணை முழுக்க முழுக்க விவசாயம் சார்புடைய அணையாகும். காரையாறில் காணப்படும் பாறை சார்ந்த பரப்புகளை மணிமுத்தாறில் காண முடியாது. மேலும் மணிமுத்தாறு மணல் நிறைந்ததாகும். எனவே மணிமுத்தாறுக்கு காரையாறில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவர்’’ என்றார்.
பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறுக்கு சுரங்கப்பாதை அல்லது குழாய்கள் மூலமாக இணைப்பு ஏற்படுத்தினால், மணிமுத்தாறு அணையும் ஆண்டுதோறும் நிரம்பும். மேலும் மணிமுத்தாறு தலைமதகு பாசனத்தில் ஒரு ஆண்டு 1, 2வது ரீச்சிற்கும், மறு ஆண்டு 3, 4வது ரீச்சிற்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விணைப்பு ஏற்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 4 ரீச்சிற்கும் தண்ணீர் அளிக்க முடியும் என்கின்றனர், விவசாயிகள்.

* கிடப்பில் வெள்ளநீர் கால்வாய்:
பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து வடகிழக்கு பருவமழையின்போது வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்காதவாறு விவசாயிகளுக்கு பயன்படும் பொருட்டு திமுக ஆட்சி காலத்தில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் கடலில் கலக்கும் உபரி நீரை வீரவநல்லூரில் இருந்து வறட்சிப்பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளம் வரை எளிதில் கொண்டு செல்ல முடியும். பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு இணைப்பு கொடுப்பது இத்திட்டத்திற்கு மேலும் மெருகூட்டும்.

* தொலைநோக்கு திட்டம்:
இத்திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது ஒரு தொலைநோக்கு திட்டம். பாபநாசத்தில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு சுரங்கப்பாதை அமைப்பதாக இருந்தாலும், குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதாக இருந்தாலும் வனத்துறையின் அனுமதி முக்கியம். ஏனெனில் சம்பந்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் காப்புக்காடுகள் பகுதிக்குள் வருகிறது. வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருப்பதால் அவர்கள் அனுமதியும், மத்திய அரசும் அனுமதி அளித்தால் இத்தகைய திட்டங்கள் நிறைவேறும். எனவே வனத்துறையினர் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுதான் முக்கியமானது. இத்திட்டம் நிறைவேறினால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்’ என்றனர்.

Tags : Manimuthur Dam ,Papanasam Dam ,Long-Term , Papanasam Dam, Manimuthur Dam, Pipeline, Water, Long Term Plan, Will it be fulfilled?
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்