×

பல லட்சம் பக்தர்களின் பல்லாண்டு கோரிக்கையான பழநி - இடும்பன் மலை ரோப்கார் திட்டம் இழுத்தடிப்பு

* தென்மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுலா மேம்படும்
* தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

பழநி: பக்தர்கள் நீண்ட கால கனவுத்திட்டமான பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையேயான ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களில் பலர் பழநி மலைக்கு அருகில் இருக்கும் இடும்பன் மலைக்கும் சென்று திரும்புவது வழக்கம். பழநி மலைக்கு கிழக்கு புறத்தில் நேர் எதிராக இடும்பன் மலை உள்ளது. பழநி முருகனை வழிபட்டால் கிடைக்கும் அநேக பலன்களும், இடும்பனை வழிபட்டாலும் கிடைக்குமென நம்பப்படுகிறது. இக்கோயிலுக்கு பக்தர்கள் தற்போது நடந்துதான் செல்ல வேண்டும். பழநி மலைக்கு உள்ள படிக்கட்டுகள் போல் இல்லாமல் இங்கு நேர்பாதையில் 500க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன.

இதனால் நடந்து செல்ல சிரமப்பட்டு பலர் செல்வதில்லை. கேரள பக்தர்கள் மட்டுமே தற்போது இடும்பன் மலைக்கு அதிகளவு செல்கின்றனர். ஆனால், பழநி மலையைப்போல், இடும்பன்மலையும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால், அறநிலையத்துறை நிர்வாகம் பழநி மலையைப்போல், இடும்பன் மலையை சரிவர கொண்டு கொள்ளவில்லை. பக்தர்களுக்கான வசதிகளை அதிகரித்திருந்தால் பழநி மலையைப்போல், இப்போது இடும்பன் மலையும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்திருக்கும். பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 1966ம் ஆண்டு முதல் வின்ச் எனும் மின் இழுவை ரயிலும், தெற்கு கிரிவீதியில் இருந்து 2004ம் ஆண்டு முதல் ரோப்காரும் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பயண ஆர்வத்தால் பழநி மலைக்கோயிலுக்கு தற்போது ரூ.73 கோடி செலவில் 2வது ரோப்கார் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

2004ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன்முறையாக பழநி கோயிலுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் முதல் ரோப்கார் அமைக்கப்பட்டது. பக்தர்களின் அதீத ஆர்வத்தால் முதல் ரோப்கார் அமைக்கப்பட்ட போதே பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கும், பழநியில் இருந்து கொடைக்கானலுக்கும் ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு அந்த இரு திட்டங்களும் பல்வேறு காரணங்களைக் கூறி கிடப்பில் போடப்பட்டு விட்டன. பழநி மலைக்கும் இடும்பன் மலைக்குமிடையே ரோப்கார் அமைக்கப்பட்டால் பல்வேறு சிறப்புகளை உடைய இடும்பன் மலையும் சிறப்பு பெறுமென பக்தர்கள் பலரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவர் ராம.ரவிக்குமார் கூறியதாவது, பழநி மலையைப் போன்று பல்வேறு சிறப்புகளை உடையது இடும்பன் மலை.

இதனை வெளிஉலகிற்கு கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி மலைக்கும் இடும்பன் மலைக்குமிடையே ரோப்கார் அமைக்கப்பட்டால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். இடும்பன் மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை உயரும். இடும்பன் மலையும், பழநி மலையும் கிட்டத்தட்ட ஒரே அளவு உயரம் உடையதென்பதால் கட்டுமான பணியும் பெரிய அளவில் சவலானதாக இருக்காது. அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து இவ்விஷயத்தில் உரிய அக்கறை செலுத்தினால் கோயில் நகரான பழநி சுற்றுலா நகரமாக மாறுவது உறுதி.  இவ்வாறு அவர் கூறினார்.

16 அடி உயர சிலை
இடும்பனுக்கு அனைத்து வகையான பழங்கள், மலர்கள் வைத்து அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இங்கு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உச்சிகால பூஜை 12 மணியளவில், இரவு 7 மணிக்கும் தினசரி பூஜை நடைபெறுகிறது. விழாக்காலங்களில் அதிகாலை 4 முதல் இரவு 11 மணிவரை இடைவெளியின்றி நடை திறக்கப்பட்டிருக்கும். கேரள பக்தர்கள் இடும்பனுக்கு மலையின் அடிவாரப் பகுதியில் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து சேவல், மலர்கள், பழங்கள், காவிஉடை வைத்து படைத்து வழிபடுகின்றனர். இடும்பன் சன்னதி முன்பாக பிரமாண்டமாக வீற்றிருக்கும் கருப்பணசாமிக்கு வாரந்தோறும் வெள்ளியன்று சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளில் இருந்து பில்லி, சூனியம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வழிபாடு செய்தால் குணமாகும் என்பது ஐதீகம். மலை மீதுள்ள இடும்பன் சிலையினுடைய உயரம் 16 அடி ஆகும். இவரைத் தரிசித்தால் இருள் நீங்கும் என்பது ஐதீகம்.

அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது, பழநி மலைக்கும், இடும்பன் மலைக்குமிடையே ரோப்கார் அமைக்கப்படுவது சிறந்த திட்டம். இதனால் பழநி கோயிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளின் வருகையும் கணிசமாக உயரும். இதுபோல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் ஆட்சேபிக்கப்பட்ட, பழநி - கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன். மீண்டும் வலியுறுத்தி பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : devotees , Palani - Idumban Hill, Ropkar Project, Pullout
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்