×

ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தலில் 63 சதவீதம் வாக்குப்பதிவு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று நடந்த 2ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவானது. ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. நேற்று 20 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 18 தொகுதிகளில் நேற்று மதியம் 3 மணிக்குள்ளும், 2 தொகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கும் தேர்தல் முடிந்தது.

பாதுகாப்பு பணியில் 42 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் உள்ள 36ம் எண் வாக்குச் சாவடியில் வன்முறை ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடியில் அதிவிரைவு படை போலீஸ்காரரின் துப்பாக்கியை சிலர் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்ததாக ஏடிஜிபி முராரி லால் மீனா தெரிவித்தார். இந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நிறுத்தப்பட்டதாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் ஜார்க்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுபே தெரிவித்தார்.

மேற்கு சிங்பும் மாவட்டத்தில், சாய்பாசா தொகுதியில் உள்ள ஜோஜோ ஹாட்டு கிராமத்துக்கு அருகே, காலியாக நின்று கொண்டிருந்த பேருந்துக்கு நக்சலைட்கள் தீ வைத்தனர். இந்த இரு வன்முறை சம்பவங்களை தவிர மற்ற இடங்களில் தேர்தல் அமைதியாக நடந்தது. 2ம் கட்ட தேர்தல் மொத்தம் 63.36 சதவீத வாக்குகள் பதிவானது.


Tags : Jharkhand ,phase ,voters ,elections ,police shootings , second phase , Jharkhand's elections, 63 percent of voters cast , police shootings
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...