×

துணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், வைரம் திருட்டு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பொருமாள்புரம், சென்டரல் அவென்யூவை சேர்ந்தவர் ரவீந்திரன் (64). தொழிலதிபரான இவர், ஆழ்வார்பேட்டையில் துணிக்கடை மற்றும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் ஆர்.ஏ.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘‘எனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ₹1.8 லட்சம், 1,100 அமெரிக்க டாலர் மற்றும் 2 வைர கம்மல், 1 வைர டாலர் மாயமாகி உள்ளது.  கதவுகள் எதுவும் உடைக்கப்படாமல் கொள்ளை நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் எடுக்காத நிலையில், பணம், வைர நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது.  எனவே வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி பணம் மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரன் வீட்டில் வேலை செய்யும் 3 வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியாட்கள் யாரேனும் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார்களா என்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.45 சவரன் திருட்டு: கிழக்கு முகப்பேரை சேர்ந்தவர் வேல் மோகன் (48), தனியார் கல்வி நிறுவனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 45 பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் ஜெ.ஜெ. நகர் போலீசார் அவரது வீட்டில் வேலை செய்து வரும் 2 பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.



Tags : diamond shop , 1.8 lakhs , diamond shop, diamond ,theft
× RELATED மது அருந்தியது, கஞ்சா புகைத்தது,...