×

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 14,000 கோடி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை ஒன்றின் மூலம் வெளிநாட்டில் உள்ள பலருக்கு சட்டவிரோதமாக 14,000 கோடி பரிமாற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்த மத்திய அரசு அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜாமீன் கோரி ஐந்தாவது முறையாக நீரவ் மோடி தாக்கல் செய்திருந்த மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில், நீரவ் மோடிக்கு எதிரான பண மோசடி குறித்த வழக்கு விசாரணை மும்பைசிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்தனர். இந்த உத்தரவால் இந்தியாவில் உள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் ெசய்ய முடியும்.


Tags : Nirav Modi ,Punjab National Bank ,Mumbai , Punjab National Bank , fraud,economic offender,Mumbai special court ,notice
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...