சென்னை: பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார், மற்றும் முதல்வரின் உறவினர் மகன் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அரசகுமார் ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார். இறைவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன், எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் திமுக தலைவருக்கு இல்லை. ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார். காலம் கணியும், திமுக தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராவார். தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.
அவர் முதல்வராக வேண்டும் என்று நினைத்திருந்தால், கூவத்தூர் அத்தியாயத்தின் போது அவர் அவ்வளவு எளிதாக செய்திருக்க முடியும். காத்திருப்பவர்கள், ஒரு நாள் தங்களுக்கு வேண்டியதை நிச்சயம் அடைவார்கள் என்பது ஒரு உண்மை. மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார். இவரது பேச்சு பாஜக கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியிருந்தது. டெல்லியில் இருந்து பதில் வரும் வரை அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகளில், ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள தடை வைத்திருந்தது. இந்த நிலையில் தான், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் அரசகுமார் திமுகவில் இணைந்தார். வரை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதனும் திமுகவில் இணைந்தார்.