×

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட 6 மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.கடந்த 1955ல் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மற்றும் புத்த சமயத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்படும். மேலும், 7 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தாலே போதும் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த மசோதா கடந்த 2016ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அது காலாவதியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மதரீதியாக பெரும்பான்மையினரை கவரும் நோக்கில் பாஜ அரசு இந்த மசோதாவை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதே நேரம், இதுபோல் குடியுரிமை வழங்குவதால், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினர் இடம் பெற நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இது தொடர்பாக, வடகிழக்கு மாநில முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இது குறித்து கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த மத்திய தகவல், ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவை. பொதுவான நீதியை வழங்கக் கூடியது. இதில் உள்ள அம்சங்களை அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன். இன்னும் ஓரிரு நாளில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.மேலும், தனிநபர் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கான தனிநபர் தகவல் பாதுகாப்பு  மசோதா 2019, 44 தொழிலாளர் சட்டங்களை 4 பிரிவின் கீழ் இணைக்கும் தொழிலாளர் சட்டம், டெல்லி பிரகதி மைதானத்தில் 5 நட்சத்திர ஓட்டல் அமைத்தல், பாரத் பாண்ட் எக்ஸ்சேஞ்ச் பண்ட் அறிமுகம், முதியோர் மற்றும் பெற்றோர்களை பாதுகாப்பதற்கான பெற்றோர் மற்றும் மூத்த குடிமகன்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத் திருத்த மசோதா, 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துதல் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடு 10 ஆண்டுக்கு நீட்டிப்பு
மக்களவை, மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கென தனி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த தொகுதிகளில் அந்த பிரிவினர் மட்டுமே போட்டியிட முடியும். இதற்கு அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசியல் சட்டத்தில் குறிப்பிட்ட காலம் வரைதான் இந்த இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினரின் நலன் கருதி இந்த ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஒதுக்கீடு அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2020ம் ஆண்டில் இருந்து 2030ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் எஸ்சி பிரிவில் 84 எம்பிக்களும், எஸ்டி பிரிவில் 47 எம்பிக்களும் உள்ளனர். நாடு முழுவதும் 614 எஸ்சி எம்எல்ஏக்களும், 554 எஸ்டி எம்எல்ஏக்களும் பதவி வகிக்கின்றனர்.

‘அரசியலமைப்புக்கு வேட்டு வைக்கிறது’
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறுகையில், ‘‘இந்த மசோதா அடிப்படையிலேயே அரசியலமைப்புக்கு எதிரானது. இது நாட்டின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். மதத்தை நம்புபவர்கள் தான் தேசியவாதிகள் என்பது பாகிஸ்தானின் சித்தாந்தம். அவர்கள் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். நாங்கள், காந்தி, நேரு, மவுலானா ஆசாத், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காட்டிய தேச கொள்கையை கடைபிடிக்கிறோம். அவர்கள் மதத்தால் தேசத்தை அடையாளப்படுத்தவில்லை. நம் நாடு மதத்தை தாண்டி எல்லோருக்குமானது. அனைவருக்கும் சம உரிமை அளிப்பது. அதுவே நமது அரசியலமைப்பும் கூறுகிறது. அரசியலமைப்பின் அடிப்படைக்கே இன்று வேட்டு வைக்கப்படுகிறது,’’ என்றார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ன.

Tags : Union Cabinet ,Parliament , Controversial, Federal Cabinet , Citizenship, soon
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...