தொடரும் கனமழை: திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன

வருசநாடு: திண்டுக்கல், வருசநாட்டில் கனமழைக்கு 7 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம், வருசநாடு அருகே காமராஜபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன், மாணியக்கா ஆகியோரது வீடுகள் நேற்று இடிந்து விழுந்தன. இதேபோல் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், தும்மக்குண்டு அருகே தண்டியங்குளத்தை சேர்ந்த முத்தையா, கோமாளிகுடிசையை சேர்ந்த லெட்சுமி ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட கண்ணன் கூறுகையில், ‘‘மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீட்டின் சுவர்கள் ஊறிப் போய் இருந்தன. நேற்று அதிகாலை திடீரென என்னுடைய வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். மேலும் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஜெயக்குமாரின் வீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம அலுவலர் சசிகுமார், ஊராட்சி செயலர் ராமசாமி, தலையாரிகள் ஞானேஸ்வரன் பாண்டி மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு  செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு, திண்டுக்கல் பேகம்பூர் புலவர் தெருவில் உள்ள ஜியாவுதீன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது ஜியாவுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். முதலில் வீட்டின் பக்கவாட்டின் ஒரு சுவர்தான் இடிந்து விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டதும், தூங்கிக் கொண்டிருந்த 9 பேரும் அலறியடித்து வெளியேறி உயிர் தப்பினர். முதல் சுவர் இடிந்து விழுந்த சிறிது நேரத்தில் வீட்டின் ஒரு பாதி முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு பாதி இடிந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தது. தகவலறிந்ததும் திண்டுக்கல் மாநகராட்சி நகர கட்டமைப்பு அதிகாரிகள், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அருகிலுள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், இடிந்த வீட்டில் தொங்கி கொண்டிருந்த மற்றொரு பாதியை இடித்து அகற்றினர்.

Related Stories:

>