தூர்வாரப்படாத நீர் வரத்து கால்வாய் வடிவுடையம்மன் கோயில் குளத்தில் மழைநீர் சேமிக்க முடியாத அவலம் : பக்தர்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் குளத்திற்கு மழைநீர் வரும் வகையில் சன்னதி தெரு மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய தெருக்களில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் அந்த கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குளத்திற்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இந்த மழைநீர் கால்வாயில் விடுவதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்து வீடுகளிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை தடுக்க  வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் இந்த  மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சில வீடுகளின் கழிவுநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் பணியை பாதியில் விட்டுவிட்டு திரும்பி சென்றனர். இதனால், பல வீடுகளின் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப் படாமல் அப்படியே உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளத்திற்கு வருகிறது.

இதனால் கோயில் குளம் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அறநிலைத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வடிவுடையம்மன் கோயில் வாசல் உள்ள திருக்குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு மழைநீர் கால்வாய் வழியாக கழிவுநீர் திருக்குளத்திற்கு  வருவதை தடுக்கும் வகையில் சிமென்ட் கலவை மூலம்  மழைநீர் கால்வாயில் பாதையை அடைத்தனர். இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘திருகுளத்திற்கு கழிவுநீர் வருவதை தடுக்க தற்காலிகமாக கால்வாய் பாதை அடைக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக தூர்வாரி சீரமைத்து வீடுகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை தடுத்து நிறுத்திய பின் மீண்டும் இந்த மழைநீர் கால்வாய் அடைப்பு நீக்கப்படும்,’’ என்றனர்.  

பக்தர்கள் கூறுகையில், ‘‘கோயிலை சுற்றி  மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில்  எங்கு பார்த்தாலும் குப்பைகள் சிதறிக் கிடைப்பதோடு, பழுதடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வரக்கூடிய குப்பைகளை அறநிலைத்துறை ஊழியர்கள் தரம் பிரித்து தனித் தனியாக கோயில் பின்புறம் மேற்கு மாட வீதியில்  வைத்தாலும்  அதை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் நாள் கணக்கில் அப்படியே வைத்து விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்றவைகளில் இருந்து வரக்கூடிய குப்பைகளை பணம் வாங்கிக்கொண்டு தரம் பிரிக்காமலேயே உடனுக்குடன் அப்புறப் படுத்துகின்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக  உள்ளனர்,’’ என்றனர்.

Related Stories:

>