தேர்தல் வாக்குறுதியால் பரபரப்பு ஒன்றிய தலைவருக்கு வாக்களித்தால் கார், ஒரு ஏக்கர் நிலம் : ஊராட்சி தலைவருக்கு வாக்களித்தால் ‘புல்லட்’

சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய தலைவர் பதவிக்கு வாக்களித்தால் கார், ஒரு ஏக்கர் நிலமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்களித்தால் புல்லட்டும் தேர்தல் வாக்குறுதியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சிகளுக்கு அறிவிக்கப்படாத நிலையில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன. இந்த 50 ஊராட்சிகளில் கானத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு, படூர், புதுப்பாக்கம், கேளம்பாக்கம், தையூர், பொன்மார், நாவலூர், சிறுசேரி, தாழம்பூர், மேலக்கோட்டையூர் ஆகிய ஊராட்சிகள் கோடிகளில் நிதி வருவாய் உள்ள ஊராட்சிகளாகும். இந்த ஊராட்சிகளை பிடிக்க அரசியல் கட்சிகள் முதற்கொண்டு சுயேச்சைகளும் அதிக அளவில் களம் இறங்குவர். இப்போதே இளைஞர்களை கவரும் வகையில் வீட்டில் உள்ள அனைத்து வாக்குகளையும் வாங்கித் தந்தால் ‘புல்லட்’ வாங்கித் தருவதாக ஒரு ஊராட்சியின் தலைவர் வேட்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  அதேபோன்று, மற்றொரு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திருமண செலவு, கல்லூரிக் கட்டண செலவு ஆகியவற்றை ஏற்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, வேன் பயணம், மருத்துவ முகாம்கள் என ஊராட்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன. திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் பதவி தற்போது பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு ஆளுங்கட்சியான அதிமுகவில் நான்கு பேர் முயற்சி செய்கின்றனர். இதனால் கிராமம், கிராமமாக அவர்கள் நால்வரும் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து செங்கல்பட்டு அருகே ஒரு கிரவுண்ட் வீட்டு மனை வாங்கித் தருவதாகவும், திண்டிவனம் அருகில் என்றால் ஒரு ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்து உள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே களை கட்டத் தொடங்கி உள்ளது. அதேபோன்று ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும் ஒன்றிய கவுன்சிலருக்கு ஸ்கார்பியோ கார் வாங்கித் தருவதாக ஒருவர் உறுதி அளித்துள்ளதாக ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்பி மரகதத்தின் கணவருமான குமரவேல் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை பிடிக்கும் வகையில் தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சீட் வழங்கும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்.

கட்டிடங்களை விற்க முடியாத நிலை    

ஊராட்சி தலைவர் தேர்தலில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். சாலையில் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக உள்ளது. பணப்புழக்கம் குறைவாக உள்ளதால் கட்டப்பட்ட கட்டிடங்களை விற்க முடியாத நிலை உள்ளது. அதேபோன்று வீட்டு மனை விற்பனையும் வெகு குறைவாகவே உள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களாகவோ அல்லது நிலத்தரகர்களாகவோ உள்ளனர். இதனால் தற்போது பொருளாதார மந்த நிலை நிலவும் சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தங்களால் செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>