×

இ-சிகரெட்டுகளை போல் புகையிலை சிகரெட்களுக்கும் தடை விதிக்கக் கோரி வழக்கு: தொண்டு நிறுவனங்கள் முடிவு

புதுடெல்லி: இ-சிகரெட்டுக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், பாரம்பரிய புகையிலை சிகரெட்டுக்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்வது, விற்பனை மற்றும் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த அவசர சட்டத்துக்கு செப்டம்பர் 18ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா கடந்த புதனன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாரம்பரிய புகையிலை சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கக்கோரி,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. டெல்லியை சேர்ந்த தொண்டு நிறுவனமான உர்ஜா, ஐதராபாத்தை சேர்ந்த விசங்யூ ஆகியவை ரிட் மனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. புகைப்பிடிப்பதால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமும், வருமானம் ஈட்டும் நபரை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கும்படியும் மனுவில் அவை வலியுறுத்த உள்ளன.

மனுதாரர்களில் ஒருவரும் விசங்யூ நிறுவனர். தலைவருமான விஜய் பாஸ்கர் எட்டப்பூ கூறுகையில், ‘‘இ-சிகரெட்டுகளை தடை செய்யும் அரசின் முடிவானது, சிகரெட் பிடிக்கும் ஆர்வமுடையவர்கள் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான வாய்ப்பை திறந்துள்ளது. நிகோடின் போதைப் பொருளினால் தீமையை ஏற்படுத்தும் ஒரே மாதிரியான இரண்டு பொருட்களுக்குள் பாகுபாடு காட்டக் கூடாது. இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டால், கேன்சர் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பாரம்பரிய புகையிலை சிகரெட்டுக்கள், பீடிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பதாக சுகாதார துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.


Tags : E-cigarette, tobacco cigarette, prohibition, fines, lawsuit
× RELATED எதிர்க்கட்சிகளை விமர்சித்த மோடி; பசு...