×

பொய்களை சொல்லி ஆட்சி செய்யும் எடப்பாடி ஆட்சியை மக்கள் விரட்டுவார்கள்: புதுகை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: பல பொய்களை சொல்லி ஆட்சி செய்யும், எடப்பாடி ஆட்சியை மக்கள் விரட்டுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு-சுஜாதா ஆகியோரின் மகள் டாக்டர் அபிநயா.  சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை முத்து-தேவி  ஆகியோரின் மகன் டாக்டர் பிரபு. இவர்களது திருமணம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின்  தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: இந்த திருமண விழாவில் ஒரு அமைச்சரை பற்றி பேசினார்கள். நான் அந்த அமைச்சரை பற்றி இங்கே பேசப்போவதில்லை. இது அரசில் மேடையல்ல. அந்த அமைச்சரை பற்றி பேசி இந்த மேடையின் மாண்பை குறைக்கப்போவதில்லை. தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அரசு நிகழ்ச்சி என்றாலும், கட்சி நிகழ்ச்சி என்றாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுகதான் காரணம் என்று பொய்சொல்லி வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தி வந்துள்ளது. அதிமுக கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் முறையான இட ஒதுக்கீடு நடக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுகவின் கோரிக்கை நியாயமானது. அதனால் நீங்கள் சரிசெய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என்று நீதிமன்றம்தான் சொன்னதே தவிர நாங்கள் ஏதும் சொல்லவில்லை. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதன் விசாரணை வரும் 13ம் தேதி வர உள்ளது.

தற்போது  பல மாவட்டங்களை பிரித்து விழா நடைபெறுகிறது. மாவட்டத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மக்கள் வளர்ச்சி அடைவார்கள் என்றால் நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் இப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ளாட்சி பகுதிகளுக்கு முறையாக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் கிடையாது.
நான் எடப்படி பழனி சாமிபோல், யார் காலிலும் மண்புழுபோல் உருண்டு முதல்வராக மாட்டேன். எதற்கு இந்த மானங்கெட்ட பொழப்பு. நான் கலைஞரின் மகன். எனக்கு சுயமரியாதை உண்டு. நான் பள்ளி காலத்திலேயே இயக்கத்தில் இணைந்து பணியாற்றி பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்,  இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல்தலைவர், தலைவர் என்று உயர்ந்திருக்கிறேன். நான் மிசாவில் சிறையில் இருந்தேனா என்று தற்போது சர்ச்சை எழுந்தது. நானே சிறையில் இருந்தேன் என்று என்னை பற்றி சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றப்படுகிறது. இதுவும் முறையாக நடக்கவில்லை.  தமிழக அரசு, பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் பணம் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ஜனவரி மாதம்தான் அறிவிப்பார்கள். தற்போது டிசம்பர் மாதத்திலேயே அறிவித்து விட்டனர். இதுகுறித்த கடந்த சில நாட்கள் முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு கதை படித்தேன்.

அது என்ன வென்றால் ஒரு திருடன் இருக்கிறான். அவன் ஒரு  நியாயமான திருடன். அந்த திருடன் ஒரு நாள் இரவு ஆட்கள் இல்லாத ஒரு  வீட்டிற்குள் சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டை மட்டும் ஒரு கவரில் வைத்து அந்த வீட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். இதேபோல் அனைவரின் வீட்டிலும் திருடி விட்டு, அனைவரின் வீட்டிலும் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு வந்துள்ளான். இந்த பணம்தான் அந்த பணமா, அந்த பணம்தான் இந்த பணமா என்று கதை முடிந்தது. எனவே இப்படி பல பொய்களை சொல்லி ஆட்சி செய்யும் இந்த எடப்பாடி ஆட்சியை மக்கள் விரட்டுவார்கள். நீங்கள் எல்லாம் இணைந்து பணியாற்ற வேண்டும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார்: பா.ஜ.க. அரசகுமார் பேச்சு விழாவில் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார் பேசியதாவது:
நான் வரும் வழியில் மக்கள், கட்அவுட்டில் உள்ள உங்கள் முகத்தை பார்த்துகொண்டு இருந்தனர். அந்த அழகு குறையாமல் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசித்த தலைவர் ஸ்டாலின்தான். நான் பெருமைக்காக சொல்லவில்லை. நாம் வாழும் காலத்தில் அவர் வாழ்கிறார். இங்கு பேசியவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர், அடுத்த முதல்வர் என்று பேசினார்கள். ஆனால் அவர் முதல்வர் அருகில், இருந்து பல முறை ஆட்சி செய்ய ஆணித்தரமாய் இருந்தவர்.  முதல்வர் இருக்கையை தட்டி பறிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு இரவில் செய்திருப்பார். ஆட்சி அதிகாரம் ஜனநாயகத்தில் கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார். பொறுமை காத்தவர்கள் பூமியை ஆள்வார்கள் என்று காத்திருக்கிறார். நீங்கள் எதிர்பார்க்கிற நோக்கம் நிறைவேறும். காலம் கனியும். காரியங்கள் நடக்கும். காத்திருங்கள் என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியதுபோல காலம் கனியும், காரியங்கள் நடக்கும். விரைவில் ஸ்டாலின் அரியணையில் ஏறுவார். நாமெல்லாம் அவரை பார்த்து அகமகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : MK Stalin ,speech ,Edappadi ,wedding ceremony ,Pudukkai ,Edappady , People ,drive , Edappady rule , telling lies, MK Stalin
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்