×

வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க காவிரி வடிநில பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: காவிரி வடிநில பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த ₹750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆறு 18 உப வடிநிலங்களை கொண்டதாக உள்ளது. இந்த உப வடிநிலங்களில் உள்ள கட்டமைப்புகள் மிகவும் பழமையானதாக உள்ளது. மேலும், காவிரி படுகையின் கடலோர பகுதிகள் சமமட்டமாக உள்ளதாலும், பருவநிலை மாறுபட்டின் காரணமாக குறுகிய காலத்தில் அதிக மழை பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2013ல் ₹11420 கோடி காவிரி வடிநில பகுதிகளான காவிரி உபவடிநிலம், வெண்ணாறு உபவடிநிலம், கீழ் கொள்ளிடம் உபவடிநிலம், கல்லணை கால்வாய் உபவடிநிலம் மற்றும் பிற திட்டங்களான கட்டளை உயர்மட்ட கால்வாய் திட்டம், கீழ் பவானி திட்டம், நொய்யல் உபவடிநிலம், உள்ளிட்டவற்றின் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி பாசன மேலாண்மையை உறுதி செய்ய பொதுப்பணித்துறை முடிவு செய்தது. மேலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் அவற்றை செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கினாலும், அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, தமிழக அரசு இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தது. அதன்படி தற்போது ₹184 கோடியில் ராஜா வாய்க்கால் பாசன திட்டம், ₹230 கோடியில் நொய்யல் ஆறு திட்டம், ₹335 கோடியில் கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசன திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, ராஜா வாய்க்கால் பாசன திட்டத்தில் 25 சாலை மேம்பாலம், 4 இடங்களில் தரைப்பாலம், 1 இடத்தில் டைல் டேம், குமாரபாளையத்தில் ஹெட் ரெகுலேட்டர் அமைக்கப்படுகிறது. 439 இடங்களில் மதகுகள் புதுப்பிக்கப்படுகிறது. 46 இடங்களில் நீரேற்றும் நிலையம், ராஜா வாய்க்கால், குமராபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், மோகனூர் வாய்க்கால் புனரமைக்கப்படுகிறது. அதே போன்று நொய்யல் ஆற்று வடிநிலத்தில், 22 குளங்கள், ெநாய்யல் ஓரத்துபாளையம், நொய்யல் அத்துபாளையம் மெயின் கால்வாய், நொய்யல் ஆறு 18 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கப்படுகிறது.

84 கி.மீட்டரில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களில் உள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்படுகிறது. கட்டளை உயர்மட்ட கால்வாய் திட்டத்தில், கிருஷ்ணராயபுரம் கால்வாய்களில் மறுகட்டுமானம், சுரங்கப்பாதையின் கீழ் குழாய் மறு கட்டுமானம், மேட்டுமகாதானபுரம் கிராஸ் ரெகுலேட்டரை மறு கட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டப்பணிகளுக்கு உடனடியாக டெண்டர் விடப்பட்டு அடுத்தாண்டு முதல் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Cauvery , Rs.750 crores , improve Cauvery dam,irrigation structures ,prevent flood damage
× RELATED அரவக்குறிச்சியில் குழாய் உடைந்து 3 மாதமாக வீணாகும் குடிநீர்