×

வடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அதாவது கடந்தாண்டை காட்டிலும் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, சேலத்தில் 4.80 மீட்டர், பெரம்பலூர் 2.83 மீட்டர், புதுக்கோட்டை 2.57 மீட்டர், திருவண்ணாமலை 3.08 மீட்டர், காஞ்சிபுரம் 2.16 மீட்டர் நாகை 2.21 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.அதே நேரத்தில் கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் குறைந்துள்ளது.ஆனால், இந்த மாவட்டங்களில் 0.04 முதல் 1 மீட்டர் மட்டுமே குறைவாக உள்ளது. இந்த பருவமழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் இந்த மாவட்டங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Groundwater level rise ,districts ,Tamil Nadu , Groundwater level,rise , 27 districts , Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில்...