×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய, விடிய மழை: தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

* முண்டந்துறை பாலம், வன சோதனைச்சாவடி மூடல்
* பாபநாசம் படித்துறை மூழ்கியது


வி.கே.புரம்: மேற்குத்  தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம்  அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. முண்டந்துறை பாலம், பாபநாசம் படித்துறைகளை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் ஓடுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. நேற்று காலை சற்று மழை குறைந்தாலும் பிற்பகல் மீண்டும் பலத்த மழை பெய்தது.

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்ட நிலையில் அதிக மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து உள்ளது. இதனால் உபரி நீர் ஷட்டர்கள் மூலம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு 14 ஆயிரத்து 204 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இதன் காரணமாக முண்டந்துறை ஆற்றை கடப்பதற்காக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு ெவள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம்  கோயில் முன்பு உள்ள படித்துறை, பிள்ளையார் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் சென்றது.

முண்டந்துறை ஆற்றுப்பாலத்தின் மேல் வெள்ளம் வருவதால் பாதுகாப்பு  கருதி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபநாசம் கோயில் முன்புள்ள படித்துறைக்கு  யாரும் குளிப்பதற்கு செல்ல முடியாத வகையில் கயிறு கட்டி போலீசாரும்,  நகராட்சி ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக பாபநாசம்  அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மதகுகளின் வழியாகவும் வெள்ளநீர் பீறிட்டு பாய்கிறது. தென்காசி மாவட்டம், கடனாநதி அணையும் நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து திறக்கப்படும் 620 கன அடி தண்ணீரும்  தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இத்துடன் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.60 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 110 மிமீ (11 செமீ) மழை பதிவாகி இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் அணையின் பாதுகாப்பு கருதி 147.37 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் 72 மிமீ மழை பதிவாகி உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 14 ஆயிரத்து 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 270 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 80.20 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 84.80 அடியானது. அணைப்பகுதியில் 65.4 மிமீ மழை பதிவானது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 989 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நம்பியாறு அணையில் 50 மிமீ, கொடுமுடியாறு அணையில் 45 மிமீ மழை பதிவானது. ராமநதி அணையில் 25 மிமீ, கருப்பாநதி அணையில் 46 மிமீ, குண்டாறு அணையில் 22 மிமீ, அடவிநயினார் அணையில் 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அம்பையில் 41  மிமீ, சேரன்மகாதேவியில் 33, நாங்குநேரியில் 35, பாளை. 38.60,  ராதாபுரம் 78, நெல்லை 34 மிமீ, தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 23.40,  சங்கரன்கோவிலில் 5, செங்கோட்டை 16, சிவகிரி 19, தென்காசியில் 30.30 மழை பதிவாகியுள்ளது.

92ஐ நினைவுபடுத்திய மழை
தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர்  கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1992ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழையால் பாபநாசம் அணை நிரம்பி தண்ணீர்  திறந்து விடப்பட்டது. அப்போது முண்டந்துறை ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூருக்குள் வெள்ளம்  புகுந்து வீடுகளின் மாடி வரை  தண்ணீர் உயர்ந்தது. நேற்றைய வெள்ளத்தில் முண்டந்துறை ஆற்றுப் பாலம் மூழ்கியதால் 1992ம் ஆண்டு வெள்ளத்தை  நினைவுபடுத்துவதாக பொதுமக்கள்  தெரிவித்தனர்.

நிரம்பி வழியும் 7 அணைகள்
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி,  குண்டாறு, அடவிநயினார் கோயில் ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. நீண்ட  இடைவெளிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருவதால்  விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கண்காணிப்பில் பாபநாசம்
பாபநாசம் அணை நிரம்பி வழிந்து வரும் நிலையில் அணையின் நீர்வரத்து நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணைக்கு 3,678 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் 4 ஆயிரத்து 630 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து நேற்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியை தாண்டியது. பின்னர் பகலில் சிறிது மழை குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

Tags : Thunderstorms ,Western Ghats , Rain, copper, heavy flooding
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...