சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து: லண்டன் பிரிட்ஜில் தாக்குதல் நடத்தியவன் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவன்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

லண்டன்: இங்கிலாந்தில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பொதுமக்கள் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவன், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்குள்ள சிறையில் அவன் 6 ஆண்டுகள் இருந்துள்ளான். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பகுதி நேற்று முன்தினம் பரபரப்புடன் காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். அப்போது இளைஞர் ஒருவன், போலி வெடிகுண்டு உடை அணிந்து நடந்து சென்றான். அவன் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.

இதில், பெண் உட்பட பலர் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை மக்கள் மடக்கி பிடித்து கத்தியை பறிக்க முயன்றனர். அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார், கத்தியால் குத்திய அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  விசாரணையில் இவனை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவன் பெயர் உஸ்மான் கான் (28). அல்- கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவன். பல ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான்.

லண்டனில் உள்ள பங்குச் சந்தைக்கு குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம் அமைக்க திட்டமிட்டது ஆகிய வழக்குளில் இவன் கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 6 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு கடந்தாண்டுதான் விடுவிக்கப்பட்டான். உஸ்மான் கான் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ‘பிஸ்மாங்கர்’ என்ற அரங்கில் நடந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளான். அங்கிருந்தே இவன் தனது தாக்குதலை தொடங்கி, லண்டன் பிரிட்ஜ் வழியாக வந்துள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு தீவிரவாத தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரசார பயணத்தை ரத்து செய்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளார். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் பலியாயினர், 48 பேர் காயம் அடைந்தனர். அப்போது, 3 தீவிரவாதிகள் வேன் மூலம் வந்து சாலையில் சென்றவர்கள் மீது மோதினர். அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

காயமடைந்த பெண் உட்பட 2 பேர் பலி
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உஸ்மான் கான் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில், பெண் உட்பட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்திலும் கத்திக்குத்து
நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள கிராட் மார்க்ஸ்ட்ராட் வர்த்தக பகுதியில் ‘ஹட்சன் பே’ என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு பொருட்கள் வாங்கி கொண்டிருந்த 2 இளம் பெண்கள் உட்பட 3 பேரை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடினார். காயத்துடன் இரு பெண்களும் அலறியடித்து வணிக வளாகத்தை விட்டு ஓடினர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் சிறுத்தை போல் அங்கிருந்த மேஜைகளை தாண்டி ஓடினார் என இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அவரை பிடிப்பதற்காக போலீஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  லண்டன் பிரிட்ஜ் பகுதியில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதனால், இந்த இரு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : London Bridge ,Attacker ,Pakistan , Attack on London Bridge
× RELATED கோவையில் விஜயதசமியையொட்டி பக்தர்கள் கத்திபோடும் ஊர்வலம்