சிறு முயற்சி... பெரும் மகிழ்ச்சி... மலைகிராம குழந்தைகளுக்கு நனவான பிரியாணி கனவு : சமையலில் அசத்திய சமூக ஆர்வலர்கள்

சேலம் : தமிழகத்தில் மலைகிராமங்களை பொறுத்தவரை, அரசும் அதிகாரிகளும் அதிகம் கண்டு கொள்ளாத ஒரு தனித்தீவாகவே இன்றுவரை இருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் கால்படும் இடமாக உள்ளது. இதனால் இன்றளவும் மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள் சுகாதாரம், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக போராடும் நிலையே நீடிக்கிறது. இது ஒரு புறமிருக்க  நகரவாசிகளுக்கு சர்வசாதாரணமாக கிடைக்கும்  உணவுகள் கூட, இங்குள்ள குழந்தைகளுக்கு கனவாகவே இருக்கிறது. இந்த வகையில் பிரியாணி சாப்பிட ஏங்கிய மலைவாழ் குழந்தைகளுக்கு, அவர்கள் முன்பே, அதனை சமைத்து பரிமாறி, கனவை நனவாக்கி உள்ளனர் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன். இவர் தனது நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் அடிக்கடி மலைகிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலையை கேட்டறிந்து உதவி செய்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிக்கு சென்ற இவரது குழு, அங்குள்ள தாமரைக்கரை, கொங்காடை மற்றும் சுற்றுப்புற கிராமத்து குழந்தைகளிடம் அவர்களது லட்சியங்கள், ஆசைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது  அனைத்து குழந்தைகளும் பிரியாணி சாப்பிட ஆசை. அதை இதுவரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற குழந்தைகளுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கும் பிரியாணி, இந்த குழந்தைகளுக்கு கனவாக இருக்கிறதே என்று சமூக ஆர்வலர்கள் குழு கலங்கியது. அவர்களின் கனவை உடனடியாக நனவாக்க வேண்டும் என்று முடிவு செய்த கண்ணன் குழுவினர், அங்குள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் உதவியுடன் பிரியாணி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 50 கிலோ கோழிக்கறியில் சுடச்சுட தயாரிக்கப்பட்ட பிரியாணியை சிக்கன்65, முட்டையுடன் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர். அதே போல் பல்வேறு இனிப்பு வகைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகளை நடத்தியும் அசத்தினர்.

பண்டிகை காலங்களில் மட்டுமே இட்லி,தோசை


மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மலைகிராம மக்கள், தங்களுக்கான நிலத்தில் அதிகளவில் சாமை, திணை போன்றவற்றை பயிரிட்டு, அதையே உணவாகவும் பயன்படுத்துகின்றனர். உள்ளூர் கோயில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமே இட்லி, ேதாசை செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பாசுமதி அரிசி வாங்கி, கிலோ கணக்கில் இறைச்சியை சேர்த்து செய்யும் பிரியாணி என்பது ஒரு பிரமிப்பாகவே இருந்தது. தற்போது பிரியாணியை ருசித்த பர்கூர் மலைகிராம குழந்தைகளிடம் பிரமிப்பு மாறி, பெருமிதம் அதிகமாக உள்ளது,’’ என்றனர்.


Tags : mountain children , Small effort,great pleasure ...
× RELATED சுரண்டையில் விவசாயிகளின் முயற்சியில்...