×

அரியலூரில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழப்பு

அரியலூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் அருகே உள்ள முடியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகள் பூங்கோதை. மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை வீட்டிற்கு செல்வதற்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடர்பாடுகளில் சிக்கிய அவர் சடலமாகவே மீட்டெடுக்கப்பட்டார். மழையின் காரணமாக காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த ஞானசேகர், மணிகண்ணன், கண்ணையன், சம்பந்தம் ஆகியோரின் குடிசை சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதேபோல கும்பகோணத்தில் தொடர்மழை காரணமாக அய்யம்பேட்டை அருகே மிலட்டூர் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் துரைக்கண்ணு என்ற முதியவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வீடுகளின் உள்ளே தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால்  குடியிருப்பு வாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அரசு மாணவர் விடுதியும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடர்மழை பெய்ததின் காரணமாக சத்தியா நகரில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. இதில் 6 குடிசைகளின் மண் சுவர் இடிந்து விழுந்தது.


Tags : wall collapse ,Ariyalur Ariyalur , Ariyalur, heavy rain, wall, female casualties
× RELATED அரியலூர் அருகே நாட்டு வெடி...