×

கோட்சேவை தேச பக்தர் என கூறியதற்காக 2முறை மன்னிப்பு கேட்டார் பிரக்யா : மக்களவையில் ராகுல் மீது ஆவேச குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ எனக்கூறிய தனது கருத்துக்காக மக்களவையில் பாஜ எம்பி பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். போபால் மக்களவை தொகுதியின் பாஜ எம்பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்கூர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான இவர், கடந்த புதன்கிழமை மக்களவையில் பேசியபோது, ‘காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ என புகழ்ந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா ஒரு தீவிரவாதி. ஆர்எஸ்எஸ்.சின் இதயத்தில் உள்ள கருத்தைதான் அவர் கூறுகிறார்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். ‘கோட்சேவை புகழ்ந்த பிரக்யா, மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில்  நேற்றும் வலியுறுத்தினர். இதனால், கட்சியின் உத்தரவை ஏற்று, மக்களவையில் பிரக்யா நேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அவர் பேசுகையில், ‘`எனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

அதே நேரத்தில், என்னை ஒரு எம்பி ( ராகுல் காந்தி) தீவிரவாதி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார். நான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு கூறுவது சட்ட விரோதமானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார். இருப்பினும், பிரக்யாவின் மன்னிப்பு திருப்தி அளிக்காததால், அவையில் காங்கிரசார் கோஷமிட்டனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை கட்சி தலைவர்களின் கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த கூட்டத்துக்குப் பிறகு, பிரக்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,  தனது கருத்துக்காக மீண்டும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில்,  ராகுல் மீது உரிமை மீறல் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அவர் அளித்தார்.

ராகுல் மீண்டும் உறுதி

டெல்லியில் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘`பிரக்யாவை தீவிரவாதி என நான் கூறியதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நாதுராம் கோட்சே போன்று பிரக்யாவும் வன்முறையில் நம்பிக்கை உடையவராக இருக்கிறார். இது தொடர்பாக என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்,’’ என்றார்.

பிரக்யாவை எரிப்பேன்’

‘கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த எம்பி பிரக்யா, எனது சட்டப்பேரவை தொகுதிக்குள் நுழைந்தால் அவரை தீ வைத்து எரிப்பேன்,’ என மத்திய பிரதேசத்தில் உள்ள பியோரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்தன் டாங்கி நேற்று முன்தினம் ஆவேசமாக கூறினார். இது, சமூகவலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. இதையடுத்து, தனது பேச்சுக்காக நேற்று அவர் மன்னிப்பு கேட்டார்.

Tags : Rahul ,Pragya ,Lok Sabha Pragya ,Lok Sabha , Pragya,Rahul indulges , Lok Sabha
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...