×

கம்பெனி அதிபர் கொலை வழக்கு சம்பளம் தராமல் அடித்ததால் கொன்றோம்: பீகார் வாலிபர்கள் வாக்குமூலம்

அம்பத்தூர்: வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இவர் அம்பத்தூர் - வானகரம் நெடுஞ்சாலையில் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 22ம் தேதி கம்பெனியில் உள்ள ஓய்வறையில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கம்பெனியில் வேலை பார்த்த பீகாரைச் சேர்ந்த ஜிஜேந்தர் (19), ரோஷன் (19) ஆகியோர் மாயமானது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் பீகாருக்கு தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 23ம் தேதி பீகாருக்கு விமானம் மூலம் சென்று, அவர்களது சொந்த ஊரான நாலந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட கொளப்பா பகுதிக்கு சென்றனர்.

போலீசார் வந்ததை அறிந்து ஜிஜேந்தர், ரோஷன் இருவரும் அங்கிருந்து தப்பினர். பின்னர், தனிப்படை போலீசார் பீகாரில் முகாமிட்டு நேற்று முன்தினம் மாலை இருவரையும் பிடித்து, சென்னைக்கு கொண்டு வந்தனர். பின்னர், போலீசார் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து  இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில்,  பிரபாகரனுடைய கம்பெனியில் விஜேந்தர், ரோஷன் இருவரும் வேலைக்கு சேர்ந்து ஐந்து நாட்கள் தான் ஆகிறது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரும் பிரபாகரனிடம் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது சம்பள பணத்தை தாருங்கள் என கேட்டுள்ளனர். ஆனால், பிரபாகரன் வேலைக்கு வந்து ஐந்து நாட்கள் தானே ஆகிறது அதற்குள் சம்பளம் கேட்கிறாயா என ஆபாசமாக திட்டி, அடித்ததாக கூறப்படுகிறது.

இதன் பிறகு,  மதியம் பிரபாகரன் சாப்பிட்டு விட்டு ஓய்வறைக்கு சென்று தூங்கியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும்,  பிரபாகரனை தலையில் இரும்பு பைப்பால் அடித்து கொன்றுவிட்டு, அவரது மணிபர்சில் இருந்த, 1,500 பணத்தையும், செல்போனையும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியது தெரிந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பீகாருக்கு சென்று பிடித்த தனிப்படை போலீசாரை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Tags : Company president ,murder ,Bihar , Company Chancellor Murder Case, Salary, Bihar Plaintiffs, Confession
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!