×

குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கு கோவை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து  ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.கோவையில் கடந்த 2010ம் ஆண்டு முஸ்கான் என்ற 10 வயது சிறுமி, ரித்திக் என்ற 7 வயது சிறுவன் ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.  விசாரணையில், சிறுமி முஸ்கான்  பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதும் சிறுவன் ரித்திக் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் பள்ளி வாகன ஓட்டுநர் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்பவரும், அவரது நண்பர்  மனோகரும் கைது செய்யப்பட்டனர்.  முதலில் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட அவர்கள் முடிவு செய்ததாகவும் பின்னர் அச்சத்தின் காரணமாக அவர்களைக் கொலை செய்ததாகவும் அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

 கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோது நவம்பர் 9, 2010 அன்று, காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டியதால் அவரை போலீசார்  என்கவுன்டர் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் முன்னாள் பள்ளி வாகன ஓட்டுநர் மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நவம்பர் 7ம் தேதி உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, மனோகரனை டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடும்படி, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் நவம்பர்  18ம் தேதி தூக்கு வாரண்ட் பிறப்பித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப 6 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசிடமும்,  சிறைத்துறையிடமும் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவகாம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு, மனோகரனை தூக்கிலிடும்படி கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மனோகரன் மனுவுக்கு நான்கு  வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : court ,Goa ,children ,kidnapping ,murder , kidnapping ,murder ,children,Goa convict
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...