×

நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஏ.பி.டி. ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் சுகாதாரமின்றி இருப்பதால், விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். பொள்ளாச்சி நகரில் குடியிருப்புகள் மிகுந்த ஏ.பி.டி. ரோட்டில், 50 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. முதலில் ஓட்டுக்கூரையாக இருந்த இப்பள்ளியில் பின் சிமென்ட் சீட் போடப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பின் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் படிக்க ஆர்வத்துடன் சேர்த்தனர். இந்நிலையில் இப்பள்ளி முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. மேலும், அடிப்படை வசதிகள் குறைந்ததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் படிக்க வைக்க தயக்கம் காட்டினர். இதனால் நாளுக்குநாள் மாணவர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியது. தற்போது  8ம் வகுப்பு வரையிலும் சுமார் 91 மாணவர்களே படிக்கின்றனர். இப்பள்ளியின் முன்புறமுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கழிவறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்திருப்பதால், அடிக்கடி விஷஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அன்மையில் கட்டப்பட்ட செப்டிக் டேங்கும் உடைந்த நிலையில், சுகாதாரமற்று உள்ளது. மேலும், இப்பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்த சத்துணவு கட்டிடத்தையும் முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டிடத்தில்,  மாணவர்கள் படித்து வந்த ஒரு பகுதி வகுப்பறைக்கு மாற்றப்பட்டது. ஆனால், பழைய சத்துணவு கட்டிடத்தை இடித்து புதிய சத்துணவு கட்டிடம் கட்ட இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  அதுமட்டுமின்றி, பள்ளி நேரம் முடிந்து அனைவரும் வெளியே சென்றபின், இரவு நேரத்தில் சிலர் பள்ளி முன்பு அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத  செயல்களில் ஈடுபடுகின்றனர். நகரில் குடியிருப்பு மிகுந்த பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் பலர் கூறுகையில், ‘‘ஏ.பி.டி. ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், சுகாதார கேடு ஏற்படுவதுடன் பகல் நேரத்திலேயே விஷ சந்துக்கள் நடமாட்டம் உள்ளது. வகுப்பறைகளை தொட்டு புதர்கள் சூழ்ந்துள்ளதால் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் அவ்வப்போது நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால், பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், இந்த பள்ளியில், வருங்காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி ஏ.பி.டி. ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தை பராமரிக்க, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Middle School ,secondary school campus , Middle School
× RELATED குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்