×

எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் சிறப்பு பாதுகாப்பு பிரதமருக்கு மட்டுமே: மக்களவையில் அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி: சிறப்பு பாதுகாப்பு பிரதமருக்கு மட்டுமே அளிக்கப்படும் என்ற எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடும் விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம், எஸ்பிஜி சட்டத்தின் உண்மையான நோக்கம் மீட்டெடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு 28 ஆண்டாக வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு எனும் சிறப்பு கமாண்டோ பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ரத்து செய்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்திலும் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்பில் தற்போது பிரதமர் மோடி மட்டுமே உள்ளார்.

இந்த நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இச்சட்டத்தில் பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர்களுக்கு 5 ஆண்டு வரை எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்ட திருத்தத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ‘‘எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டதால் தான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் வரை, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்ட நிலையில், அடுத்த சில மாதத்தில், சட்ட திருத்தம் கொண்டு வராமலேயே எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்தது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.

எஸ்பிஜி.க்கு இந்த அவையில் அரசியல் சாயம் பூசப்படுவதாக  திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டினார்.  எஸ்பிஜி என்பது ஒரு கவுரவமாக பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட போது எழாத சர்ச்சைகள் சோனியா குடும்பத்தினருக்கு நீக்கப்பட்டதும் எழுந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பை அரசு ரத்து செய்யவில்லை. அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருப்பதால்தான், இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் பலமுறை எஸ்பிஜி பாதுகாப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

600க்கும் மேற்பட்ட முறை எஸ்பிஜி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மோடி அரசு செயல்படவில்லை. எஸ்பிஜி.யின் உண்மையான நோக்கத்தை மீட்டெடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு என்பது பிரதமருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டியதாகும்.  இவ்வாறு அவர் பேசினார்.  இதைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இ-சிகரெட் தடை மசோதா நிறைவேறியது:
 இ-சிகரெட் தடை மசோதா மீதான விவாதமும் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், ‘‘இ-சிகரெட் இளைஞர்கள் மத்தியில் புதிய ஸ்டைலாக மாறி வருகிறது. இதில் குறைவான தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்களே இருக்கிறது என்பதற்காக உடல் நலத்திற்கு தீங்கிழைக்காது என்று அர்த்தமாகி விடாது. எனவே, அதிகரித்து வரும் இப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இ-சிகரெட்களுக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என்றார். இம்மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் விற்கவும், தயாரிக்கவும் தடை விதிக்கப்படும். மீறினால் 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Tags : Amit Shah ,Lok Sabha , SPG Law Amendment Bill, Special Security, Prime Minister, Lok Sabha, Amit Shah
× RELATED மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்...