×

ஆலந்தூர் 161வது வார்டு வஉசி தெருவில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலம் 161வது வார்டுக்கு உட்பட்ட வஉசி தெருவில்  வசிக்கும் மக்கள்  அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற நிலையில் வசித்து வருகின்றனர். இங்கு 4 கழிப்பிடங்கள் இருந்தும் அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2010ம் ஆண்டு ₹12 லட்சத்து 50 ஆயிரம் செலவில்  புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் திறக்கப்படாமலேயே பாழடைந்து கிடப்பதால் தற்போது மது மற்றும் கஞ்சா புகைக்கும் இடமாக மாறியுள்ளது. தற்போது இந்த கட்டிடங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட இடம்போல் காட்சி அளிக்கிறது.   இதற்கு இடையேதான் ஒரு அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இதனால் இங்குள்ள சிறார்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.இந்த கழிப்பிடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் அல்லது முழுவதையும் இடித்து தரை மட்டமாக்கிவிட்டு நவீன கழிப்பிடம், சுகாதார மையம், சிறுவர் பூங்கா போன்றவற்றை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்த பகுதியில் மழைநீர் கால்வாய்கள்  தூர்ந்து காணப்பட்டது. இந்த கால்வாய்களை சீரமைக்க போவதாக கூறி  வந்த  ஒப்பந்ததாரர்கள் நீண்ட பள்ளம் தோண்டிவிட்டு, எவ்வித பணியையும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த பள்ளத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விழுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சியாய் இருந்தபோது அடிப்படை  வசதியுடன் காணப்பட்ட இந்த வஉசி தெரு மாநகராட்சியுடன் மாறியபின் படுமோசமாக  காணப்படுகிறது. செருப்பு தைப்பவர்கள், நடைபாதை தொழில் செய்பவர்கள், தினக்கூலிகள் என பல்வேறு தரப்பினர் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியினை   மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி பகுதி என பெயருக்குதான் எங்கள் பகுதி இருக்கிறது. எங்கள் பகுதியை ஒதுக்கப்பட்ட பகுதியாக அதிகாரிகள் கருதுகின்றனர். அதனால் தான் அவர்கள் இந்த பகுதிக்கே வருவதில்லை.  தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் வாதிகள் இங்கு வந்து வாக்குறுதி மட்டும் கொடுத்து விட்டு செல்கின்றனர். பின்னர் எட்டி பார்ப்பது இல்லை. இது எங்கள் சாபக்கேடு’ என்றனர்.


Tags : facilities ,Alandur ,Ward Wucy Street ,Ward , Alandur ,Wucy Street, basic facilities, authorities
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்