×

மதுரையை மருத்துவ முனையமாக மாற்றும் நைபர் திட்டம் 8 ஆண்டாக இழுத்தடிப்பு

மதுரை: மதுரையை மருத்துவ முனையமாக மாற்றும் ‘நைபர்’ எனப்படும் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தென்மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER - national institute of pharmaceutical education and research) அமைக்க 2011-12ல் திட்டமிடப்பட்டது. இதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இக்கல்வி நிறுவனம் அமைப்பதற்கென பல்வேறு மையங்கள் தேர்வாகின. இதில் ஒன்றாக மதுரையும் தேர்வானது. இதன்படி 2011, ஜனவரியில் நடந்த 8வது நிதிக்கமிஷன் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து இறுதி செய்யப்பட்டது.

இதன்படி உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து ஆமதாபாத், கவுஹாத்தி, ஐதராபாத், ஹாஜிபூர், கொல்கத்தா, மொகாலி, லக்னோ ஆகிய இடங்களில் இக்கல்வி நிறுவனம் அமைத்து, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்பட்டியலில் இருந்த மதுரையில் ‘நைபர்’ அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மதுரையில் இக்கல்வி நிறுவனம் அமைக்க ரூ.1,100 கோடி முன்மொழிவு தயாரித்து, இதற்கான நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்து மத்திய நிதியமைச்சகத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

நைபர் கல்வி நிறுவனத்திற்கான நிலம், மதுரை மாவட்டம்,  திருமோகூர் அருகே 116 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நைபர் கல்வி நிறுவனம் பார்மசி எனும், மருந்தியல் அறிவியல் துறையில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகளை வழங்கும். மேலும், மருந்து கட்டுப்பாடு, கண்காணிப்பு, மருந்துகளின் பயன்பாடு, அதனை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்ப்பது மற்றும் சமூகவியல் தாக்கங்கள் என பலதரப்பட்ட அம்சங்களில் படிப்புகளை வழங்கும். இத்துடன், மருத்துவ வேதியியல், இயற்கை மருந்துகள், பாரம்பரிய மருத்துவம், மருந்தியல் கூறாய்வு, நச்சு இயல், உயிரி தொழில் நுட்பவியல், மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தொழில் நுட்பம், மருந்து மேலாண்மை உள்ளிட்ட 15 விதமான படிப்புகளையும், நைபர் வழங்குகிறது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘நைபர் உயர் மருத்துவக்கல்வி நிறுவனமானது மதுரையில் அமைவது மதுரையை மருத்துவ முனையமாக மாற்றுவதுடன், தென்மாவட்டத்திற்கென பெரும் வளர்ச்சியை வழங்கும். இதுதொடர்பாக வைகோவுடன் இணைந்து, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறைக்கான நாடாளுமன்றக்குழுவின் தலைவராக திமுக எம்பி கனிமொழி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், இந்த முன்மொழிவை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். 15வது நிதிக்கமிஷனில் (2020-25ஆம் ஆண்டில்) மதுரையில் நைபர் கல்வி நிறுவனத்தை நிறுவிட அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2013, 2018லும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அரசு அனுமதித்தால், வரும் கல்வியாண்டிலேயே நைபர் நிறுவனம் செயல்பாட்டிற்கு வரும். மதுரையில் செயல்பாட்டிற்கு வரும் எய்ம்ஸ்சுடன் இணைந்து நைபரும் மாணவர் சேர்க்கையை துவக்கலாம். நைபர் நிறுவனத்திற்கான சொந்த வளாகம் உருவாகும் வரை, காமராஜர் பல்கலைக்கழகத்திலேயே குறைந்தது 3 ஆண்டுகள் இயங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது’’ என்றார்.

பல்கலை.யுடன் இணைந்து கூடுதல் படிப்புகள் உருவாகும்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘நைபர் நிறுவனம் தற்காலிகமாக பல்கலைக்கழகத்தில் இயங்குவதற்கான வேண்டுகோள்,  சிண்டிகேட் கூட்டத்தில் முன் வைக்கப்படும். மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைவது, நிச்சயம் தென்தமிழகத்தில் மருந்தியல் துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக அமையும். நைபர் நிறுவனத்தோடு காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து பல்வேறு படிப்புகளை மாணவர்களுக்கு வழங்க புதிய வாய்ப்புகளும் ஏற்படும்’’ என்றார்.

மருத்துவத்துறையில் முதலீடு அதிகரிக்கும்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு கூறும்போது, ‘‘மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் மருத்துவ உற்பத்தித் துறையில் ஏராளமானோர் முதலீடு செய்ய முன்வருவார்கள். சிறந்த மருந்தியல் வல்லுனர்கள் கிடைப்பார்கள். மருந்துத் துறையில் ஏற்படும் இந்த புதிய வாய்ப்புகளால், இத்தொழில் துறை புதிய வளர்ச்சியை எட்டும்’’ என்றார்.

Tags : Transform Madurai ,Medical Terminal , niper
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...