×

சென்னையில் அரசு பஸ்கள் வருவதை தெரிந்துகொள்ள ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம்

* ஜனவரிக்குள் செயல்பாட்டுக்கு வருகிறது
* போக்குவரத்துத் துறை அதிகாரி தகவல்

 சிறப்பு செய்தி: அரசு பஸ்கள் எப்போது வரும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு பஸ்களில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட நாட்களாகவே உள்ளது. இதனால், ஆங்காங்குள்ள பஸ் ஸ்டாண்டுகளில் பலமணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க  வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு 1972ம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பேருந்து வழித்தட கால அட்டவணை, தற்போது பயன்படுத்தப்படுவதே காரணம் என தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இயக்கப்படும் எம்டிசி பஸ்கள், ஒரே  வழித்தடத்தில் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதனால் எப்போது பஸ் வரும் என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் நிலைமை இன்னும் மோசம்.  இப்பிரச்னை போக்குவரத்துத் துறைக்கு சென்றதையடுத்து, பஸ்கள்  வருகையை பயணிகள் அறிந்து கொள்ளும் ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், ஜனவரிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ‘ஆப்’ பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், அரசு பஸ்கள் எப்போது வரும் என பஸ் ஸ்டாண்டுகளில் காத்திருக்கும்  மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு பஸ் எங்கிருக்கிறது, எப்ேபாது வரும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ‘லேம்ப்-ஆப்’ஐ (லொக்கெட் அன்ட் அசெஸ் மை பஸ்) அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த ‘ஆப்’ஐ பஸ்சில் பயணிக்க விரும்பும் பயணி, முன்னதாக தங்களது  மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘ஆப்’பிற்குள், பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் பயணி செல்லும் போது, அதில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரும் பஸ்களின் விவரம்  தெரியவரும்.

ஒருமுறை பயணி தான் பயணத்தை தொடங்கும் பஸ் ஸ்டாப்பின் விவரத்தை பதிவு செய்து விட்டால், அவ்விடத்திற்கு சம்பந்தப்பட்ட நேரத்தில் வரும் பஸ்களின் விவரத்தை தெரிந்துகொள்ள முடியும். மேலும் ரூட் நம்பரும் இடம்பெறும்.  இதன்மூலம் பயணிக்கு தேவையான ரூட்டை தேர்வு செய்து, அவ்வழியாக இயக்கப்படும் பஸ்களை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  இந்த ‘ஆப்’ கூகுள் மேப் உதவியுடன் இயங்கும். முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 3,300 எம்டிசி  பஸ்களில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அனைத்து அரசு பஸ்களிலும் ‘ஜிபிஎஸ்’ பொருத்தப்பட உள்ளது. வரும் ஜனவரிக்குள் அறிமுகம் செய்யவுள்ளோம். அரசு பஸ்கள் நேரத்திற்கு வருவதில்லை என்று கூறி, பிற பயண முறைகளை  மக்கள் பயன்படுத்துவதை, இதன்மூலம் தடுக்க முடியும். இதனால் அரசு பஸ்களின் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Introduction ,Chennai , Lamp-app model, check ,availability, government buses ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...