×

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அரசாணைக்கு தடைகோரி வழக்கு: விரைவில் விசாரணைக்கு வருகிறது

மதுரை: மேயர் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்தும் அரசாணைக்கு தடை கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது.மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஸ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தலின்றி மறைமுகமாக தேர்வு செய்திடும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்படி 15 மாநகராட்சி மேயர்கள், 121 நகராட்சி தலைவர்கள், 528 பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முதல் கவுன்சில் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர். துணை மேயர் மற்றும் துணைத்தலைவர்கள் ஏற்கனவே, மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் நிலையில், இனி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

மறைமுகத்தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசு தங்களுக்காக சுயநலத்துடன் மறைமுகத்தேர்தலை அறிவித்துள்ளது. அவசர சட்டம் பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. இந்த தேர்தல் முறை பெருமளவில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் இணக்கமான நிலை இருக்கும்.கவுன்சிலர்கள் கூடி மேயர் மற்றும் தலைவரை தேர்வு செய்யும்போது, மக்களுடன் நேரடித் தொடர்பில்லாமல் போய்விடும். இதனால் மக்களுக்கு போதுமான பலன்கள் கிடைக்காது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கொண்டு வந்த நேரடித் தேர்தல் முறையை அவரது கட்சியினரே தற்ேபாது ரத்து செய்து மறைமுகத் தேர்தலை திணித்துள்ளனர். மறைமுகத் தேர்தல் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு விரோதமானதாக இருந்தால் அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. எனவே, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது தொடர்பான தமிழக அரசு அவசர சட்டம் செல்லாது என்றும், தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : impeachment election ,mayor ,trial ,Government ,Election ,Case , Indirect, election ,mayor,government, trial
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...