×

விளைச்சல் பாதிப்பால் விலை கிடுகிடு உயர்வு சாம்பார் வெங்காயம் 160ஐ தொட்டது: ஜனவரி 15ம்தேதி வரை குறைய வாய்ப்பில்லை

சென்னை: விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. சாம்பார் வெங்காயம் 160ஐ தொட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 15ம் தேதி வரை வெங்காயம் விலை குறைய  வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினமும் 70 லாரிகளில் பெரிய வெங்காயமும்  (பல்லாரி), 15 லாரிகளில் சின்ன ெவங்காயமும் (சாம்பார் வெங்காயம்) வருவது வழக்கம். ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வெங்காயம் விளைச்சல் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், இந்த 3 மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரத்து குறைவால் வெங்காயம் விலை கடுமையாக  உயர தொடங்கியுள்ளது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தினந்தோறும் போட்டிப் போட்டு புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயம் உறித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால், வெங்காயம் விலையை கேட்டாலே கண்ணீர்  வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஜனவரி 15ம் தேதி வரை வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  வெங்காயம் தமிழகத்திற்கு வருவது குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு ெமாத்த மார்க்கெட்டுக்கு தினசரி 70 லாரிகளில் பெரிய வெங்காயமும், சின்ன வெங்காயம் 15 லாரிகளிலும் வந்தது. அப்போது பெரிய வெங்காயம் கிலோ 30, சின்ன  வெங்காயம் 40க்கும் விற்கப்பட்டது. தற்போது வெங்காயம் வரத்து குறைவால் 3 மாநிலங்களிலும் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து  குறைந்துள்ளது. 70 லாரிகளில் வந்த பெரிய வெங்காயம் தற்போது 40 லாரிகளில்தான்  வருகிறது. சின்ன ெவங்காயம் 15 லாரிகளில் இருந்து 5 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால், ₹30க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ₹80க்கும், ₹40க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ₹120 வரையும் விற்கப்படுகிறது. வெங்காயத்தை பதுக்கி வைப்பதால் விலை உயர்ந்து வருவதாக சிலர் கூறி வருகின்றனர். வெங்காயத்தை பதுக்கி வைப்பது என்பது முடியாத காரியம். பதுக்கி வைத்து விற்கும் பொருள் வெங்காயம் கிடையாது. வரத்து குறைவால்தான் விலை  உயர்ந்துள்ளது. தற்போதைய வெங்காயம் விலைதான் அதிகபட்ச விலையாகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த விலை ஜனவரி 15ம் தேதி வரை அப்படிதான் இருக்கும். அதன் பிறகு புதிய வரத்து வந்த பிறகுதான் விலை  குறைய வாய்ப்புள்ளது. அதுவும் புதுவரத்தை பொறுத்துதான் விலை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த மார்க்கெட்டில்தான் பெரிய வெங்காயம் கிலோ ₹80க்கும், சின்ன வெங்காயம் ₹120க்கும் விற்கப்படுகிறது. அந்த வெங்காயத்தை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகள் ெபரிய வெங்காயத்தை ₹110 வரையும், சின்ன வெங்காயத்தை  கிலோ ₹160 என்றும் ஏரியாவுக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பட்ஜெட்டில் வெங்காயத்துக்கு என்று கூடுதலாக பணத்தை ஒதுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் என்பது சமையலில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. வெங்காயம்  விலை உயர்வால் பெயரளவுக்கு தான் ஒவ்வொரு வீடுகளிலும் சமையலில் சேர்க்கப்படுகிறது.தாராளமாக பயன்படுத்தி வந்ததை அடியோடு நிறுத்தியுள்ளனர். இட்லி, தோசை உள்ளிட்டவற்றிற்கு வெங்காய சட்னி பயன்படுத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு வீட்டிலும் வெங்காயம் சட்னி நிறுத்தப்பட்டு தக்காளி சட்னிக்கு மாறியுள்ளனர்.  மேலும் ஓட்டல்களிலும் வெங்காயம் சட்னி என்பது ஒரு முறைதான், அதுவும் குறைவாகத்தான் வைக்கப்படுகிறது. மறுமுறை கேட்டால் வைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

முருங்கைக்காய் விலையும் எகிறியது
வெங்காயம் விலைதான் உயர்ந்து கொண்டே வருகிறது என்றால் மறுபுறம் முருங்கைக்காய் விலையும் உயர்வை சந்தித்து வருகிறது. அதாவது ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த மார்க்கெட்டில் ₹40க்கு விற்கப்பட்டது. தற்போது இது ₹130  முதல் ₹150 வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் முருங்கைக்காய் ₹180 வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tags : hikes ,Half , Prices rise ,yields, Sambar onions , January,shortage
× RELATED கோவையில் வாக்கு இயந்திரம்...