×

கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து மழை: கோயில் வளாகங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல கோயில் வளாகங்களில் வடிய வழியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வயல்கள், ஏரி, குளம், வாய்க்கால்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லாததால் சிவன், அம்மன் கோயில், நந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

போதுமான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடியவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளிமாநில, வெளிமாவட்ட மக்கள் அதிகளவில் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் அனைத்து சன்னதிகளுக்கும் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். வேறுவழியின்றி தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது தேங்கி நின்ற தண்ணீரால் கோயில் சன்னதி முழுவதும் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வந்த பலர் வழுக்கி விழுந்து எழுந்து சென்றன்ர.

இதேபோல் கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள பெட்டி காளியம்மன் என்ற சிறப்பு பெற்ற சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. கோயிலை சுற்றிலும் சாலைகள் உயர்த்தி அமைத்ததால் மழைநீர் வடிய வழியில்லாமல் 3 நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னமும் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிவதற்கும், பாதாள சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலக்காதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rainwater
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு