×

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக 70 ஆண்டு பழமையான அரசமரம் அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் இருந்த 70 ஆண்டு பழமையான அரசமரத்தை அகற்றி மறுநடவு செய்ய கனரக வானகத்தின் மூலம் கோவை கொண்டு சென்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், திருப்பூரில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  டவுன்ஹால் பகுதியில்  பழைய  கட்டிடங்கள் இடிக்கப்பட்டு,  புதிதாக 4  மாடியில் பொதுப் பயன்பாட்டு கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெறுகிறது.இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த 10 பழமையான மரங்களை வெட்டக்கூடாது, அதற்கு பதிலாக அந்த மரங்களை வேறு பகுதியில் மறுநடவு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அங்கிருந்த சுமார் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்றை மறுநடவு செய்ய கோவை காளபட்டியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்தது.

இதற்காக நேற்று காலை முதல் மரத்தை வேருடன் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது.  மரத்திற்கு முதலில் பூஜை செய்து தனியார் நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் இந்தப் பணியைத் தொடங்கினர். பொக்லைன் இயந்திரம் மூலமாக வேர்கள் பாதிக்கப்படாத வகையில் கவனமாக மரத்தை சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, கீழே சாய்ந்த மரத்தை ராட்சத இயந்திரங்கள் மூலமாக லாரியில் ஏற்றப்பட்டது. பிறகு வேர் பகுதியில் வெயில் படாத வகையில் துணி சுற்றி, மரம் வளர்ந்த பகுதியிலிருந்து தேவையான மண் லாரியில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மரம் திருப்பூரிலிருந்து கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மரத்தை எடுத்துச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை மாநகர போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தி கொடுத்தனர். இந்த மரம் கோவை காளப்பட்டியில் மறுநடவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tirupur Smart City PEEPAL , PEEPAL
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...