×

விவசாயிகளை கேட்காமல் நிலங்கள் திடீரென பறிப்பு: அ.சரவணன், தொமுச நிர்வாகி

தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின்தடங்களுக்கு மத்திய மின்சார வாரியமும், தமிழக அரசும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்தன. மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனும், தமிழக மின்சார வாரியமும் இணைந்து இந்தப்  பணிகளை செய்து வருகின்றன. உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின் பாதைகள் மூலம் மின்சாரம் இங்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கும், ஆந்திரம் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் கொண்டு  செல்லப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக புதிதாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றன. உயர் அழுத்த மின் கோபுரங்களால்  மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு கடும் பாதிப்பு  ஏற்படுகிறது. உயர் மின் கோபுரங்களுக்கு கீழே விவசாய பணி  மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன்,  பயிர்கள் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எந்தவொரு திட்டத்துக்கு நிலம் எடுப்பதாக இருந்தாலும், பயன்படுத்திக்கொள்ளும் உரிமையாக இருந்தாலும் யாருடைய நிலம், பரப்பளவு, சர்வே எண், அதற்கான இழப்பீடு எவ்வளவு போன்ற விவரங்களை அரசு வெளியிடுவதுதான் நடைமுறை.  ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.

இது விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல, அரசின் எந்தவொரு திட்டத்துக்கு நிலம் தேவைப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளரிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெற  வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் நிலம் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவில்லை.நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டம் 2013ன்படி அரசினுடைய திட்டங்களுக்கு நிலம் எடுப்பதாக இருந்தால் 70 சதவீதம்  விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும். தனியார் திட்டங்களுக்கு  நிலம் எடுத்தால் 80 சதவீதம் விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும்.நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு நகர்ப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் இரு மடங்கும் கிராமப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் நான்கு  மடங்கும் இழப்பீடாகத் தர வேண்டும்.இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் எதுவும் இத்திட்ட அமலாக்கத்தில் கடைப்பிடிக்கப் படவில்லை. இது மத்திய அரசின் திட்டம். நீங்கள் நிலத்தைத் தரவில்லையென்றாலும் நாங்களே எடுத்துக்கொள்வோம் என்று மிரட்டியும்கூட சில  ஒப்பந்தக்காரர்கள் பணிகளைச் செய்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம், அவர்களின் சாகுபடி செய்யும் நிலம் மட்டும்தான். அதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு மீளமுடியாததாக இருக்கிறது.

உயர் அழுத்த மின்தடம் செல்லும் இரு பகுதிகளிலும், எத்தனை கிலோ வாட் என்பதைப் பொறுத்து 40 மீட்டர் முதல் 90 மீட்டர் அகலத்துக்கு இடைவெளி விட வேண்டும். அந்தப் பரப்பளவுக்குள் வேறு பணிகள் எதையும் செய்ய முடியாது. சிறு,  குறு விவசாயிகளாக இருந்தால் மொத்த நிலமும் இழந்ததைப் போலத்தான் ஆகும். உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் மின்தூண்டல் காரணமாகப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இயந்திரங்களைக் கொண்டு விவசாயப் பணிகள் செய்ய முடியாது. எனவே, மாற்று முறையில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பெருநகரங்களிலும் தரவழிகேபிள்  மூலமாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. இந்தமுறையில் சம்மந்தப்பட்ட திட்டத்தை விவசாய நிலத்துக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்ற வேண்டும்.நிலத்தின் உரிமையாளரிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் நிலம் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவில்லை.



Tags : Lands ,A. Saravanan ,A. Saravanan Lands of Sudden Seizure Without , farmers, lands,A. Saravanan, administrator
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்