×

தடையில்லா மின்சாரத்தை தமிழக மக்களே தடுக்கலாமா?: தங்கமணி, மின்சாரத்துறை அமைச்சர்

சட்டீஸ்கரில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வரும் வகையில் உயர்மின்கோபுரங்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது அரசு; அவர்களும்  முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதில், தென்னை மரத்துக்கு ரூ.36,700ம், டவர் அமைக்க 55 சதவீதம் தொகை, கோபுரம் அமைப்பதில் ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு 100 சதவீதம் தொகை, கம்பி வழித்தடம் செல்கிற இடத்துக்கு 15  சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் தொகை என்று கணிசமான தொகை ஒவ்வொரு விவசாயிக்கும்  தரப்படும். இப்படி  அவர்களிடம் தெரிவித்த பின்னர் தான் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது;  அவர்களும் ஒத்துக்கொண்டனர். அவர்கள் முதல்வரை பார்த்து நன்றியும் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். இதுவரைக்கு நாங்கள் இவ்வளவு இழப்பீட்டு தொகை உட்பட  மொத்த நிதி தந்ததில்லை. முதல்முறையாக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக விவசாயிகளுக்கு இவ்வளவு நிதி வழங்கப்படுகிறது. குறைவான தொகை என்று யாரும் கூற முடியாது. இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். தமிழகத்தில் 8 ஆயிரம் மின் கோபுரங்கள் அமைக்க போவதாக வரும் தகவல் தவறு. அதில் உண்மையில்லை. சட்டீஸ்கரில் இருந்து தமிழகம் வரையே மொத்தம் 2000 மின்கோபுரங்கள் தான்  அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 600 மின்கோபுரம் தான் வருகிறது. எல்லா விவசாயிகளுக்கும் எவ்வளவு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அவர்கள்  நாளை முதல் நஷ்ட ஈடு வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

புதைவழித்தட மின் கேபிள் மூலம் இவ்வளவு கிலோ வாட் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியாது. ஜப்பான், அமெரிக்கா, சீனா என்று எந்த நாடுகளிலுமே தொழில்நுட்பம் இல்லை. ஒரு வேளை புதை வழித்தட மின்கேபிள் அமைக்க  தொழில்நுட்பம் இருந்தால் உயர்மின்கோபுரம் மூலம் கொண்டு வருவதை காட்டிலும் 20 மடங்கு அதிகமாகும்.உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகே தாராளமாக விவசாயம் செய்யலாம். நான் விவசாயம் செய்யும் புகைப்படத்தை வேண்டுமானால் காட்டுகிறேன். ஆனால், போர்வெல் மூலம் விவசாயம் செய்வது தான் கடினம். அங்கே  போர்வெல்லை கழற்றி மாட்டுவது கடினம் என்பதால் அது தான் சிரமமாக இருக்கும். மற்றப்படி விவசாயம் செய்வதில் எந்த பாதிப்பும் கிடையாது.நில மதிப்பு என்று பார்க்கும் போது ஒரு சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். நான் இல்லை என்று மறுக்கவில்லை. இந்த திட்டம் வந்தால் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். மற்ற மாநிலங்களில் கோபுரம் போட அனுமதி அளித்து விட்டனர்.  ஆனால், நமது மாநிலத்தில் தான் இன்னும் கோபுரம் அமைப்பதில் இழுபறிக்கிறது; பல்வேறு கேள்விகள் எழுகிறது. இப்படி கேள்வி எழுப்பினால், அடுத்த முறை நமக்கு எப்படி கொடுப்பார்கள்? இதை, மின்ேகாபுர திட்டத்துக்கு எதிர்ப்பு  தெரிவிப்பவர்கள் உணர வேண்டும்.  

மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய மின்சாரத்தையே நம் மக்களே தடுக்கிறார்கள் என்று பேச மாட்டார்களா. மற்ற மாநில விவசாயிகள் தாராளமாக இந்த திட்டத்துக்கு தந்து விட்டனர். இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் மெகாவாட்  வருகிறது. இதில், 4 ஆயிரம் மெகாவாட் தமிழகத்துக்கு வருகிறது. மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் கேரளாவிற்கு செல்கிறது. நாளைக்கு நாம் மின்சாரம் கொள்முதல் செய்தால் கூட கம்பி வழித்தடம் இல்லாவிடில் எப்படி கொண்டு வர முடியும். திமுக ஆட்சியில் கூட மின்சார தடை ஏற்பட்டது. அப்போது,  அவர்கள் மின்சாரம் கொள்முதல் செய்த போது கம்பி வழித்தடம் இல்லாத தால், அங்கிருந்து மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இதுவரைக்கும் நாங்கள் இவ்வளவு இழப்பீட்டு தொகை உட்பட மொத்த நிதி தந்ததில்லை.  முதல்முறையாக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக விவசாயிகளுக்கு இவ்வளவு நிதி வழங்கப்படுகிறது.

Tags : Thangamani ,Tamil Nadu ,Stop , Uninterrupted power ,Tamil Nadu , Thangamani, Minister of Electricity
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...