×

மலைப்பகுதியில் சாரல் மழை சதுரகிரி மலையேற திடீர் தடை: 5 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 5 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒருநாள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு செல்ல இன்று முதல் 27ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி என வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். மழைக்கான அறிகுறி தென்பட்டதால் வனத்துறையினர் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

வனத்துறை ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பின், வழக்கத்திற்கு மாறாக காலை 6 மணிக்கு பதிலாக 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். காலை 8 மணிக்கு சதுரகிரி கோயில் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் கோயிலுக்கு செல்ல தடை விதித்து, வனத்துறையினர் தாணிப்பாறையில் கேட்டை மூடி விட்டனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறை கேட் முன்பு காத்திருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயிலுக்கு செல்ல முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். சாரல் மழை பெய்து வருவதால் வனத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.  கோயிலிலும் இரவில் பக்தர்கள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : SADARAKIRI Mountaineering ,Devotees , Sarel rain, Chaturagiri hill, sudden block
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது