×

சுத்திகரிப்பு நிலையம்-’பில்டர் ஹவுஸ்’ முடக்கம் சேறும், சகதியுமாக சிறுவாணி குடிநீர் சப்ளை

கோவை: சிறுவாணி அணையின் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பில்டர் ஹவுஸ் முடங்கியது. இதனால் சேறும், சகதியுமாக சிறுவாணி குடிநீர் சப்ளையாகிறது. கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ. தொலைவில்  வனப்பகுதியில் அமைந்துள்ளது. கோவை மாநகரின் குடிநீர் தேவைக்காக, சிறுவாணி  நதிக்கு குறுக்கே இந்த அணை கடந்த 1929ம் ஆண்டு 26.5  சதுர கி.மீ. பரப்பிற்கு நீர் ேதங்கும் வகையில், ஆங்கிலேய பொறியாளர் மயிலோன்  என்பவரால் கட்டப்பட்டது. அணை நிரம்பினால் 223 நாட்களுக்கு தினமும் 10 கோடி  லிட்டர் குடிநீர் பெற முடியும். கடந்த 35 ஆண்டுகளில் அணை 19 முறை  நிரம்பியுள்ளது. தற்போதும் நிரம்பி காணப்படுகிறது.

இந்த அணையை சுற்றி,  பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியாகும். முத்திகுளம் மலை இந்த அணைக்கு கிழக்குப்புறம்  அமைந்துள்ளது.  இயற்கையான நீர்வீழ்ச்சி இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். சிறுவாணி  அணையில் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். தற்போது முழு அளவில் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் 1,500 மீட்டர் டணல் (மலை குகை) மூலமாக பெறப்படுகிறது. அதற்கு பிறகு மயிலோன் பங்களா என்ற இடத்தில் இருந்து காட்டு ஓடை வழியாக குடிநீர் சப்ளையாகிறது.  ஆணையாறு வழியாக இந்த நீர் 6 கி.மீ தூரம் பாய்ந்து சிறுவாணி அடிவாரத்திற்கு வருகிறது. அங்கே சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின், ஆலம் (படிகாரம்) கலந்து 1000 மீட்டர் விட்டம் கொண்ட பிரதான குழாய் மூலமாக கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோர பேரூராட்சிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த 3 மாதமாக சிறுவாணி குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல், காட்டு ஓடை நீரை தேக்கி, அதில் குளோரின் மட்டும் பெயரளவிற்கு கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் கலந்துள்ள சேறு, சகதிகளை அகற்றாமல் விடுவதால் பிரதான குழாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் இரு இடத்தில், ராட்சத சுத்திகரிப்பு தொட்டி உள்ளது. இதில் சுத்தம் செய்யப்படும் தண்ணீர் குளோரின், படிகாரம் கலப்புக்கு பின் சுத்த நீர் தொட்டி பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படும். முன்னதாக பில்டர் ஹவுஸ் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். இங்கே குடிநீரில் உள்ள கிருமிகள் வேதிப்பொருட்கள் மூலமாக அழிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 3 மாதமாக பில்டர் ஹவுஸ் பயன்பாடின்றி கிடக்கிறது. இங்கே 16 ஜோடி, பில்டர் பெட் உள்ளது. இவற்றில் சேறு, சகதி படிந்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் குழாய் பழுதாகி கிடக்கிறது.

சீரமைப்பு பணி காரணமாக குடிநீரை சுத்திகரிக்காமல் அப்படியே குளோரின் கலந்து அனுப்புகிறார்கள். தெளியாத குடிநீரில் படிகாரம் அதிகளவு கலந்து, தௌிந்த குடிநீர் போல் காட்டுவதும் நடக்கிறது. பில்டர் ஹவுசில் இருந்து கடந்த இரு வாரத்தில் 15 லோடு சேறு சகதி அகற்றப்பட்டது. தற்போது சிறுவாணி வனத்தில் மழை பெய்து வருகிறது. நீேராடை வழியாக வரும் குடிநீரில் சகதி மேலும் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. குடிநீரை தெளிய வைக்க, சகதிகளை அகற்ற, கூடுதலாக ராட்சத சுத்திகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். ஆனால், இதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு பணி, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடிநீர் முறையாக சப்ளையாகிறதா? என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனிப்பதில்லை. குறிப்பாக, சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வக பிரிவும் முடக்கப்பட்டுள்ளது. சிறுவாணி குடிநீரின் தரத்தை மேம்படுத்த, சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.  இது பற்றி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘’சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் சில இடையூறுகள் உள்ளன. பராமரிப்பு பணி முடிவடைந்ததும் எல்லாம் சீராகிவிடும்’’ என்றனர்.

ஓடையில் வீணாகும் 3 கோடி லிட்டர் தண்ணீர்

சிறுவாணி நீர், சுத்திகரித்த பின்னர் 3 கோடி லிட்டர் குடிநீர் கழிவாக விடப்படுகிறது. இந்த நீரை மறுசுழற்சி மூலமாக பயன்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தண்ணீர், பெரியாறு ஓடை வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்திற்குள் புதர்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. பாம்பு, தேள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் ஊழியர்கள் வேலை செய்ய அச்சப்படுகின்றனர். குடிநீரை தெளிய வைக்க, நீண்ட நேரம் தேவைப்படுகிறது. தர பரிசோதனை கூடம் ஏற்படுத்தவேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.

Tags : Builder House ,Refinery - DigitalBuilder , Refinery, Freeze, Juvenile Drinking Water Supply
× RELATED குழாய்கள் பதிக்கும் பணிகள் 50 சதவீதம்...