×

வகுப்பில் பாம்பு கடித்து மாணவி பலி பள்ளி முதல்வர், டாக்டர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: வயநாட்டில் வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி பலியான சம்பவத்தில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் சிகிச்சை அளிக்க தாமதம் செய்த அரசு டாக்டர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி அருகே புத்தன்குந்நு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசிஸ். இவரது மகள் ஷஹ்லா ஷெரின் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். கடந்த 20ம் தேதி மாலை மாணவி வகுப்பறையில் இருந்தபோது சுவரில் இருந்த துவாரம் வழியாக வந்த பாம்பு அவரை கடித்தது. அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஆசிரியர்கள் அலட்சியம் காட்டினர். இதனால், மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விவகாரம் கேரளாவில் பூதாகரமாக வெடித்தது. மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரளா முழுவதும் மாணவர் சங்கத்தினர், இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  இதற்கிடையே சம்பவம் நடந்த அரசு பள்ளி முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடும் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளி முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன், பத்தேரி அரசு மருத்துவமனை டாக்டர் ஜிஷா மெரின்ஜாய் ஆகியோர் மீது பத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத், பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடந்தினார். இதில் கேரளா முழுவது ம் அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்குள் வகுப்பறைகள், சுவர்கள், கழிப்பறைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் துவாரங்களோ, விரிசல்களோ இருந்தால் உடனடியாக அவற்றை அடைக்கவும், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் சம்பவம் நடந்த பள்ளியில் உடனடியாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று பள்ளியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகத்தில் இருந்த 2 பாம்பு புற்றுகள் அகற்றப்பட்டன.

அமைச்சருக்கு கருப்புக்கொடி
கேரள கல்வி அமைச்சர் ரவீந்திரநாத், நேற்று பத்தேரியில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்றார். தந்தை, உறவினர்களை கட்டிப்பிடித்து அழுத அவர், சிறுமியின் தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாம்பு கடித்து மாணவி இறந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. வருங்காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இப்பள்ளியை சீரமைக்க ₹2 கோடி ஒதுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதற்கிடையே, பத்தேரி வந்த அமைச்சருக்கு காங்கிரஸ், பாஜ கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். பத்தேரியில் கல்விதுறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

Tags : School snake bite victim ,doctor ,school principal , Student kills ,snake bite , school principal, suing ,doctor
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...