×

ஊழல் காங்கிரசுடன் சேர்ந்ததன் மூலம் மக்களுக்கு சிவசேனா துரோகம் செய்து விட்டது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றிருக்கும் தேவேந்திர பட்நவிசுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வாழ்த்து ெதரிவித்தார். மேலும் ஊழல் கட்சியான காங்கிரசுடன் கைகோர்த்ததன் மூலம் மக்களுக்கு சிவசேனா துரோகம் இழைத்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில் மாநிலத்தில் ஒரு திடீர் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் நேற்று திடீரென முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில் தேவேந்திர பட்நவிசுக்கு பாராட்டு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா மக்கள் பாஜ-சிவசேனா கூட்டணிக்காக வாக்களித்தார்கள். ஆனால் மக்களுக்கு சிவசேனா துரோகம் செய்துவிட்டு ராமர் கோயில் மற்றும் வீர் சவார்கருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழல் காங்கிரசுடன் கைகோர்க்க முடிவு செய்தது.ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இன்றைக்கு பாஜ தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா சென்றால் அது நல்லது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜ.வுடன் வந்தால் அது கெட்டது. சிவசேனாவின் இந்த வாதம் எப்படி நியாயமாகும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் தனி உரிமை
மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து லக்னோவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், அரசியல் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை. அவருக்கு திருப்திகரமாக இருந்ததால், சம்மந்தப்பட்ட நபரை ஆட்சி அமைக்க அவர் அழைப்பு விடுப்பார்,’’ என்றார்.

அமித் ஷாவின் ‘அடியாள்’
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் ஜனநாயகத்தை பாஜ கொன்று புதைத்துள்ளது. மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங், அமித்ஷாவின் ‘அடியாள்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஆதரவு எம்எல்ஏ.க்கள் ஆளுநரின் முன்பாக எப்போது நிறுத்தப்பட்டார்கள்? திருடர்களைப் போல பதவியேற்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன? மக்கள் அளித்த தீர்ப்புக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் இது. இந்த சட்டவிரோத ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும். அஜித் பவாரை சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியே அதிகார பசி கொண்ட பாஜ அடிபணிய வைத்துள்ளது,’’ என்றார்.

மக்கள் தீர்ப்புக்கு அவமரியாதை
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் அரசு அமைந்த விதம் ஜனநாயகமற்றது. அம்மாநிலத்தின் மக்கள் தீர்ப்பு அவமதிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையே இல்லாமல் எப்படி அரசு அமைக்க முடியும்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

சரத் பவாருக்கு பதவிஆசை காட்டும் பாஜ
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதுவாலே பாட்னாவில் அளித்த பேட்டியில், ‘‘அஜித் பவாருக்கு பக்கபலமாக வருவது பற்றி சரத் பவார் பரிசீலிக்க வேண்டும். மேலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர் பாஜ கூட்டணிக்கு வந்தால், அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு அவருக்கு பரிசாக வழங்கப்படலாம்,’’ என்றார்.

எதுவும் நடக்கலாம்னுஅப்பவே சொன்ேனன்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் அளித்த பேட்டியில், ‘‘ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன், கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று. இப்போது எனது கருத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். பட்நவிஸ், அஜித் பவாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் அளித்துள்ள அவகாசத்தில் அவர்கள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள்’’ என்றார்.

தொண்டர்கள் கொண்டாட்டம்
தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்றதை பாஜ தொண்டர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் வரை நரிமன் பாயின்டில் உள்ள பாஜ அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், நேற்றுக் காலை தேவேந்திர பட்நவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்ற தகவல் பரவியதும் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். மேளதாளம் முழங்க ஆடிப்பாடிய தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

காங். எம்எல்ஏ.க்கள் மீண்டும் ‘பேக்கப்’
மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பின்னர் பாஜ-சிவசேனா இடையே ஆட்சியமைப்பதில் பிரச்னை ஏற்பட்டபோது, காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கடத்தப்படலாம் என்ற அச்சத்தால், அக்கட்சி ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது அங்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று இரவு ஜெய்ப்பூர் அழைத்து ெசல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது தொடர்பாக பாஜ.வுக்கு காங்கிரஸ் கேட்டுள்ள 10 கேள்விகள்:
1 அரசு அமைக்க பாஜ உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் எப்போது. யார் கொடுத்தது?
2 இந்த கடிதத்தில் பாஜ.வுக்கு ஆதரவு தருவதாக எத்தனை தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்?
3 ஆதரவு கடிதத்தில் உள்ள எம்எல்ஏ.க்களின் கையெழுத்துக்களின் உண்மை தன்மையை ஆளுநர் எப்போது, எப்படி அறிந்தார்?
4 ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு ஆளுநர் எப்போது பரிந்துரை செய்தார்?
5 நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மத்திய அமைச்சரவை எப்போது கூடியது? அமைச்சர்கள் யார் எல்லாம் கலந்து கொண்டார்கள்?
6 ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ளும்படி ஜனாதிபதிக்கு மத்திய அரசு எப்போது பரிந்துரை செய்தது?
7 மத்திய அமைச்சரவை பரிந்துரை கடிதத்தை ஜனாதிபதி எப்போது ஏற்றுக் கொண்டார்?
8  முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்க வரும்படி தேவேந்திர பட்நவிஸ், அஜித் பவாருக்கு ஆளுநர் எப்போது  அழைப்பு விடுத்தார்?
9  பதவியேற்பு நிகழ்ச்சி எப்போது நடந்தது? இந்நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, முக்கிய அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் யாரையும் அழைக்காதது ஏன்?
10 முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்காதது ஏன்? புதிய அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் எப்போது நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் எதையும் ஆளுநர் விதிக்காதது ஏன்?



Tags : Prakash Javadekar ,Shiv Sena ,Congress , Congress , Corruption, Shiv Sena,Union Minister Prakash Javadekar
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு